மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

1,000 கோடிக்கு மேல் சொத்துடைய இந்தியர்கள்!

1,000 கோடிக்கு மேல் சொத்துடைய இந்தியர்கள்!

இந்தியாவில் மொத்தம் 831 பேர் ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து வெளியாகியுள்ள பார்க்லேஸ் ஹூரன் ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 34 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 831 பேர் ரூ.1000 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 லட்சம் கோடியாகும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பங்கைக் காட்டிலும் அதிகமாகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் 214 பேர் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.

இப்பட்டியலில் மும்பையைச் சேர்ந்த அதிக பணக்காரர்கள் உள்ளனர். மும்பையில் மட்டும் 233 பேர் ரூ.1000 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர். ஆசியாவின் குடிசைகள் நிறைந்த பெரிய நகரமும் மும்பைதான். அதேபோல டெல்லியில் 163 பேரும், பெங்களூருவில் 70 பேரும் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளவர்களில் 59 விழுக்காட்டினர் மும்பையைச் சேர்ந்தவர்கள். மேலும், இப்பட்டியலில் இடம் பெற்றவர்களில் 163 பேர் பெண்களாவர்.

துறை வாரியாகப் பார்த்தால் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களில் 13.7 விழுக்காட்டினர் மருத்துவத் துறையிலும், 7.9 விழுக்காட்டினரும் மென்பொருள் மற்றும் சேவைத் துறையிலும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் 9 பேரின் சொத்து மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon