மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

ரஃபேல் இன்று : மோடிக்கு ராபர்ட் வத்ரா சவால்!

ரஃபேல் இன்று : மோடிக்கு ராபர்ட் வத்ரா சவால்!

நெருக்கடிகள் வரும்போதெல்லாம், தன்னை வைத்து அரசியல் செய்வதை பாஜக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது காங்கிரஸ். இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை திசை திருப்பும் விதமாக மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், இந்த விவகாரத்தில் சோனியா காந்தியின் குடும்பத்தாருக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

“காங்கிரஸ் ஆட்சியின்போது ராபர்ட் வத்ராவுக்கு நெருக்கமான நிறுவனத்தை பங்குதார நிறுவனமாக சேர்த்துக்கொள்ள பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் மறுத்து விட்டதால்தான், அந்த பேரத்தை காங்கிரஸ் அரசு முறித்துக்கொண்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், ராபர்ட் வத்ராவின் நண்பர் நிறுவனத்துக்கு ரபேல் விமான உதிரிப்பாகங்கள் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில்தான் காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது” என்று அவர் விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலை ராபர்ட் வத்ராவுடன் இணைத்துப் பேசத் தொடங்கினார்கள்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (செப்டம்பர் 27) முகநூலில் பதிவிட்டிருந்த வத்ரா, “ஆரம்பத்தில் வியப்பாக இருந்தாலும், இப்போது இதன் பின் உள்ள அரசியல் புரிந்துவிட்டது. நெருக்கடிகள் வரும்போதெல்லாம் என்னை வைத்து அரசியல் செய்வதை பாஜக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான அடிப்படை ஆதாரங்கள் இன்றி அரசியல் உள்நோக்கத்துக்காக என்னை வேட்டையாடப் பார்க்கிறார்கள். இப்போது ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பா.ஜனதா முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், சமீபத்தில் ஒட்டுமொத்தமாக அம்பலமான ரஃபேல் ஒப்பந்தம் ஊழலுக்கும் நானே காரணம் என்ற வகையில் பேசுகின்றனர்” என்று விமர்சித்தார்.

“வெறும் பொய்களை கட்டவிழ்த்துக்கொண்டே இருப்பதற்கு பதிலாக, 56 அங்குல மார்பு வைத்துள்ளவர்(நரேந்திர மோடி), துணிச்சலாக வந்து ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். மக்கள் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கேட்டு வெறுப்படைந்து இருக்கிறார்கள்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon