மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

பகுதி நேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்!

பகுதி நேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்!

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும், அதுவரையில் அவர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தி வழங்கவும், பணியிட மாறுதலுக்கு ஏற்பாடு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று( செப்டம்பர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும். தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 500 பேர் பகுதி நேரம் என்ற அடிப்படையில் சிறப்பாசிரியர்களாக பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களுக்குத் தொடக்க நிலையில் மாத ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தியதன் காரணமாக மாத ஊதியமாக ரு. 7 ஆயிரத்து 700 வழங்கப்பட்டு வருகிறது” என்றவர் பகுதி நேர ஆசிரியர்கள் படும் சிரமங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், “பகுதி நேர ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும், பணியிட மாறுதலுக்குக் கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 24.09.2018 முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களைத் தமிழக அரசு புதன்கிழமை இரவு அங்கிருந்து அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளவர், பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும்போது அவர்களை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சுமூகத் தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

“பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்று கூறியிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எனவே தமிழக அரசு - பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். குறிப்பாகக் கடந்த 8 ஆண்டுகளாக ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்ற சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon