மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

இருபதைத் தொட்ட கூகுள்!

இருபதைத் தொட்ட கூகுள்!

இணையதள சர்ச் இன்ஜின்களில் முக்கியமானதாகக் கருதப்படும் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 27) 20 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இன்றைய நவீன உலகில் குறிப்பிட்ட எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் இணையத்தில் சென்று தேடுகையில் நம் சிந்தையில் முதன்மையாக உதிப்பது கூகுள் தான். அந்த அளவிற்கு இணைய உலகில் இதன் புகழ் பரவிக் கிடக்கிறது. அன்று வெறும் தேடுபொறி நிறுவனமாக சாதாரணமாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று தானியங்கி கார்களை வடிவமைப்பது வரை ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இதன் 20 ஆண்டுகால வளர்ச்சியை தொடர்ந்து பார்ப்போம்.

சர்ச் எஞ்சின்

கூகுள் நிறுவனத்தின் முதல் வெளியீடான தேடுபொறி தளம் 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. google என்ற வார்த்தை googol என்ற வார்த்தையிலிருந்து மருவியதாகக் கூறப்படுகிறது. Googol என்பது ஒன்றிற்கு அருகில் 100 பூஜ்ஜியங்கள் கொண்ட எண்ணை குறிக்கும் சொல்லாகும்.

ஜி-மெயில்

கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை 2004ஆம் ஆண்டு தொடங்கியது. ஆரம்பத்தில் ஸ்டோரேஜ் வசதியின்மை காரணமாக அந்த நிறுவனம் ஒவ்வொரு பயனர்களுக்கும் 1 ஜிபி அளவிலான ஸ்டோரேஜை மட்டுமே வழங்கி வந்தது. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு தற்போது அது 15 ஜிபியாக உயர்த்தப்பட்டுள்ளது.

யூ ட்யூப்

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் முதன்மையான யூட்யூப் நிறுவனம் இன்று 56 மொழிகளில் இயங்கி வருகிறது. தற்போது ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 120 மணி நேர வீடியோக்கள் அதில் பதிவேற்றம் செய்யப்படுவருகின்றன.

கூகுள் மேப்ஸ்

தெரியாத ஊருக்கு அல்லது தெரியாத இடத்திற்குச் செல்ல நேரிடும் ஒருவருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது இந்தக் கூகுள் மேப்ஸ். கால மாற்றத்திற்கேற்ப வடிவத்தில் தொடங்கி போக்குவரத்து நெரிசல், பொது போக்குவரத்து என இதில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன.

கூகுள் எர்த்

செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு பூமியின் எந்த புள்ளியை வேண்டுமானாலும் மிகத் துல்லியமாக பார்க்கும் இந்த அம்சமும் கூகுளுக்கு சொந்தமானதுதான்.

கூகுள் ஆண்ட்ராய்டு

இன்று நாம் உபயோகிக்கும் மொபைல்களில் இருக்கும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் கூகுளுக்கு சொந்தமானவை. ஆப்பிளின் iOS, ப்ளாக்பெர்ரி ஆகிய முன்னணி நிறுவனங்களுடனான போட்டியை சமாளித்து கூகுள் இன்று 80 சதவிகித ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்திருக்கிறது.

கூகுள் வேமோ

மென்பொருள் துறையில் கிடைத்த ஆதிக்கத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம், 2016ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் சந்தையிலும் கால்பதித்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க வேமோ என்னும் தானியங்கி கார் வடிவமைப்பைத் தொடங்கியது. சமீபத்தில் ஜாக்குவார் நிறுவனத்துடன் இணைந்து உலகின் முதல் மின்சார தானியங்கி காரை உருவாக்கி வருகிறது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon