மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

பணம் இல்லாவிட்டால் கடவுள் ராமனே தோற்றுவிடுவார்!

பணம் இல்லாவிட்டால் கடவுள் ராமனே தோற்றுவிடுவார்!

“தேர்தலில் பணத்தை செலவழிக்காவிட்டால் கடவுள் ராமனையே மக்கள் தேர்ந்தெடுக்கமாட்டார்கள்” என கோவா ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சுபாஸ் வெலிங்கர் தெரிவித்துள்ளார்.

கோவா மாநில ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்தவர் சுபாஷ் வெலிங்கர். அந்த மாநிலக் கல்வித்துறையில் மத்திய அரசு ஆங்கிலத்தை திணிப்பதாகக் கூறி அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு, சுபாஷ் வெலிங்கர் நடத்தி வந்த மொழிப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் கருப்புக் கொடி காட்டினர். இதனால் கோவா மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் பதவியிலிருந்து சுபாஷ் வெலிங்கர் நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பாரதிய பாஷா சுரக்ஷா மன்ச் என்ற கட்சியை தொடங்கி கோவாவில் உள்ள பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்.

இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் நேற்று (செப்டம்பர் 26) மாணவர்கள் மத்தியில் பேசிய சுபாஷ் வெலிங்கர், “தேர்தல் நேரங்களில் பணத்தையும், பரிசு பொருட்களையும் கொடுத்து பெண்களையும், இளைஞர்களையும் அரசியல்வாதிகள் ஏமாற்றுகிறார்கள். தற்போதுள்ள அரசியல் சூழலில் தேர்தலில் பணத்தை செலவழிக்காவிட்டால் கடவுள் ராமனையே மக்கள் தேர்ந்தெடுக்கமாட்டார்கள்” என்றவர், தேர்தலில் பணம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,“மற்ற கட்சிகளைப்போல பாஜகவும் அறநெறியையும், தனித்தன்மையையும் இழந்து நிற்கிறது. கோவா மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசியல்வாதிகள் மருத்துவம் பார்ப்பதற்காக அமெரிக்கா செல்கின்றனர். ஆனால் நாங்கள் மருத்துவம் பார்ப்பதற்காக அரசு நடத்தக்கூடிய மருத்துவமனைக்குச் செல்கிறோம்”என்றவர், தனது அமைச்சரவையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களை மனோகர் பாரிக்கர் கைவிட்டுவிட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“பணம் இல்லாமல் கட்சியை வளர்த்தெடுக்க எங்களுக்கு பத்து ஆண்டுகள் ஆனது. ஆனால் தற்போது அப்படி இல்லை தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்கள் பணத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டது. ஊழலற்ற ஆட்சியைப் பற்றி பேசுகிறது பாஜக, ஆனால் பணத்தை சம்பாதிக்காத ஒரு பாஜக அமைச்சரையாவது எனக்கு காட்டமுடியுமா ”என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon