மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

ஸ்டாலின் மீது புகார் : அரசு முடிவு!

ஸ்டாலின் மீது புகார் : அரசு முடிவு!

புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பான புகார், விசாரணை ஆணையத்திடமிருந்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை விசாரிக்க 2011ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி நீதிபதி தங்கராஜ் ஆணையம் அமைக்கப்பட்டது. அவர் டிசம்பரில் ராஜிநாமா செய்ததையடுத்து ஆணையராக நீதிபதி ரகுபதி நியமிக்கப்பட்டார்.

இந்த விசாரணை ஆணையம், முன்னாள் முதல்வரான கலைஞர், முன்னாள் துணை முதல்வரான மு.க.ஸ்டாலின், முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு 2015ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது.

ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவும், தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யவும், ஆணைய நடைமுறைகளை எதிர்த்தும் மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில் ஆணைய விசாரணைக்கு 2015ஆம் ஆண்டில் தடைவிதிக்கப்பட்டது.

தடையை நீக்கக்கோரி ஆணையம் தாக்கல் செய்த மனுவை இந்த அண்டு ஜூலை மாதம் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆணையத்தை நிறுத்திவைத்தும் ஆணையத்தைக் கலைப்பது குறித்து அரசு பரிசீலிக்கவும் உத்தரவிட்டிருந்தார். மேலும் அரசால் ஆணையங்கள் அமைக்கப்படுவது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கடுமையான கண்டனங்களை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விசாரணை ஆணையத்தின் பொறுப்பிலிருந்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி ராஜிநாமா செய்வதாக அறிவித்து தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பினார் நீதிபதி ரகுபதி.

நீதிபதி ரகுபதி ராஜிநாமா செய்ததையடுத்து புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார். பிற விசாரணை ஆணையங்களின் காலத்தை நீண்ட நாட்களாக நீட்டிக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் இன்று (செப்டம்பர் 27) நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, புதிய ஆணையர்கள் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனை ஏற்ற நீதிபதி வழக்கை முடித்து வைக்க முன்வந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், தங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டியுள்ளதால் வழக்கை நாளை (செப்டம்பர் 28) ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.

அதனையேற்ற நீதிபதி சுப்ரமணியம் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார். மேலும், மக்களுடைய வரிப் பணம் வீணடிக்கப்படக் கூடாது என்பதிலும், தேவையில்லாமல் அரசு ஊழியர்களின் வேலை நேரமும் வீணடிக்கக் கூடாது என்பதிலும் நீதிமன்றம் கவனமாக இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் காரணங்களுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon