மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

ரேசன் கடையில் வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு ஆகியவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், இதனால் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்றும் நடிகை கவுதமி கூறியுள்ளார்.

விருதுநகரில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவுதமி, “உங்களுக்குப் பிரச்சனையாமே? என்று சிலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆமாம். புற்றுநோய் என்று கூறியிருக்கிறேன். புற்றுநோய் என்று வாயால் சொல்வதற்கு அச்சப்படத் தேவையில்லை. நான் கேன்சர் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு, நல்லா ஸ்டடி பண்ணுன பிறகுதான் பேச வந்திருக்கிறேன்.

நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம். குறிப்பாக வெள்ளையாகக் காணப்படும் அனைத்துப் பொருட்களும் சுத்தமானவை அல்ல. வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு, மைதா போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இதனைத் தவிர்ப்பதால் புற்று நோய் வருவதில் இருந்து தப்பிக்கலாம்.

நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம், வெல்லம், கருப்பட்டி, புழுங்கல் அரிசி, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை ரேசன் கடைகளிலேயே மக்களுக்குக் கிடைக்கும்படி அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். இயற்கைக்கு அப்பாற்பட்டு, பாஸ்ட் ஃபுட் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதே உடல் ரீதியான பிரச்சனைக்கு வித்திட்டு விட்டோம்.பாஸ்ட் ஃபுட்டால் உடலுக்குக் கெடுதல் என்பது இந்தத் தலைமுறைக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். அடுத்த தலைமுறை நிச்சயம் தெரிந்துகொள்ளும்.

இயற்கை வாழ்வியல் முறை குறித்து அவர்கள் சொன்னார்கள்; இவர்கள் சொன்னார்கள்; நான் சொன்னேன் என்று யாரும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் வேண்டியதில்லை. அறிவியல் பூர்வமான உண்மையை நானே கூறினாலும், அது சரிதானா என்று நீங்களும் ஆராய வேண்டும். உண்மையைத் தெரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும். பொது அறிவு அவசியம். யாருடைய பேச்சைக் கேட்கலாம். யாருடைய பேச்சைக் கேட்கக்கூடாது என்பதில் தெளிவு வேண்டும்” என்றார் கவுதமி.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon