மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

நிதியமைச்சருடன் வேலுமணி, தங்கமணி

நிதியமைச்சருடன்  வேலுமணி, தங்கமணி

14வது நிதி ஆணையத்தின் 2017–18ஆம் ஆண்டிற்கான இரண்டாவது தவணை தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இதற்காக நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் நன்றி கூறினர்.

ஊரக வளர்ச்சி, வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதற்காக விருதை டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 27) நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை அமைச்சர் வேலுமணி சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது அமைச்சர் தங்கமணியும் உடனிருந்தார். அருண் ஜேட்லியிடம் உள்ளாட்சித் துறைக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, “14வது நிதி ஆணையத்தின் 2017–18ஆம் ஆண்டிற்கான 2ம் தவணைத் தொகை ரூ.1390 கோடியை விடுவித்துக் கொடுத்துள்ளனர். அதற்காக நானும் மின் துறை அமைச்சர் தங்கமணியும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். அடுத்த தவணையில் ஊக்கத் தொகை உள்பட ரூ.2160 கோடி நிலுவைத் தொகை உள்ளது. அதனையும் வேண்டுமெனக் கேட்டிருக்கிறோம். பரிசீலிப்பதாக நிதியமைச்சர் உறுதி கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “உலக தர மையங்கள் என்று 10 ஊர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர். அதில் பொன்னேரியும், தூத்துக்குடியும் இடம் பெற்றுள்ளது. கோவையும் இடம்பெற வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று தெரிவித்த வேலுமணி, மும்பை-பெங்களுர் பாதையை கோவை வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். கோவையில் ஜாப் ஒர்க் செய்ய ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக உள்ளது, அதனைக் குறைக்கக் கோரியுள்ளோம் என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon