மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

ஆன்லைன் வணிகம்: மருந்து வணிகர்கள் கடையடைப்பு!

ஆன்லைன் வணிகம்: மருந்து வணிகர்கள் கடையடைப்பு!

ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் நாளை (செப்டம்பர் 28) 24 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது குறித்து அச்சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.சலீம் கூறுகையில், பல்வேறு பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவது போன்று, தற்போது மருந்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார். “இந்த மாதத் தொடக்கத்தில் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருந்து விற்பனையாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாளை (செப்டம்பர் 28) மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும்.

ஆன்லைன் மருந்து விற்பனையால் பொதுமக்கள்தான் பாதிப்படைவார்கள். ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யும்போது மருந்தின் தன்மை குறித்து அறிந்துகொள்ள முடியாது. மருந்துகள் மாறுவதற்கும், காலாவதியான மருந்துகள் அனுப்பி வைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மருந்துக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மருந்துகள் அந்தந்த மாநிலத்தில் இருந்து வாங்குவதால் ஆய்வு செய்யப்பட்டு வாங்கப்படுகிறது. ஆன்லைனில் இந்த முறை கிடையாது. பல மருந்துகள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காவிட்டால் வீரியம் குறைந்து பயனற்றதாகிவிடும். மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் சீட்டுக்கு, எப்படி மருந்து சாப்பிட வேண்டும் என்பதை மருந்துக் கடை விற்பனையாளர்கள் மட்டுமே சொல்ல முடியும். இது தவிர தூக்க மாத்திரை, வீரிய மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள் எந்த சிரமமின்றி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிடும்” என்று தெரிவித்தார்.

உயிர் காக்கும் பொருட்களான மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடையடைப்பு நடைபெறும் நேரத்தில், அவசர மருந்து தேவைக்கு 044-28191522 என்ற எண்ணில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon