மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!

தமிழகத்தில் மீன்பாடி வண்டிகள் இயக்கப்படுகிறதா என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மீன்பாடி வண்டியில் அதிகளவில் சரக்குகளை ஏற்றுவது மற்றும் அதிவேகத்தில் செல்வது போன்றவற்றால் விபத்து ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதனால், பலர் உயிரிழப்பது தொடர்கதையானது. இந்த வாகனங்களுக்குக் காப்பீடோ, பதிவுச் சான்றிதழோ இல்லாததால், பலியானவர்களின் குடும்பத்தினர் இழப்பீடு பெற முடியாது. ஆனாலும், மீன்பாடி வண்டிகளால் ஏற்படும் உயிர்சேதத்தைத் தவிர்க்க முடியாத நிலை உருவானது.

இதனையடுத்து, தமிழகத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மீன்பாடி வண்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு மீன்பாடி வண்டிகளுக்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை காவல் துறையும், போக்குவரத்துத் துறையும் அமல்படுத்தவில்லை என்று கூறி, டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நேற்று (செப்டம்பர் 27) நீதிபதிகள் வேணுகோபால், பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீன்பாடி வண்டிகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மீன்பாடி வண்டிகள் இயக்கப்படவில்லை என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். சட்டவிரோதமாக இயக்கப்படும் மீன்பாடி வண்டிகளைப் பறிமுதல் செய்து, அவற்றின் என்ஜினை அழித்துவிட வேண்டும் என காவல் துறைக்கும், போக்குவரத்துத் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்த அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற நீதித் துறைப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon