மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

வர்த்தகப் போர் நமக்கு சாதகமே: ஜேட்லி

வர்த்தகப் போர் நமக்கு சாதகமே: ஜேட்லி

சர்வதேச அளவில் நிகழ்ந்துவரும் வர்த்தகப் போரால் இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பி.ஹெச்.டி. சேம்பர் ஆஃப் காமெர்ஸ் அமைப்பின் வருடாந்தரக் கூட்டம் டெல்லியில் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வீடியோ கான்ஃபெரன்ஷிங் வழியாக மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி பங்கேற்றார். அவர் பேசுகையில், “சில சர்வதேசக் காரணிகள் இந்தியாவை மிக மோசமாகப் பாதித்துள்ளன. ஆனால் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டால் இக்காரணிகள் இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்குப் பாதையாகவே இருக்கும். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வர்த்தகப் போரை மிகக் கவனமாகப் பார்க்கவேண்டும். அதில் நமக்கான வாய்ப்பு வரும்போது அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது மூண்டுள்ள வர்த்தகப் போரால் இந்தியாவின் உற்பத்தித் துறைக்கு சிறப்பான வாய்ப்புகள் உருவாகும் எனக் கூறியுள்ள ஜேட்லி, எந்திரங்கள், மின்னணு சாதனங்கள், வாகன பாகங்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக், ரப்பர் ஆகிய பொருட்களுக்கு அமெரிக்கச் சந்தையில் போட்டிகள் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்ற ஆகஸ்ட் மாதத்தில் சீனாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் இறக்குமதிப் பொருட்கள் மீதான வரியைப் போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தின. அதற்கு முன்னர் ஜூலை மாதத்திலும் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களின் இறக்குமதிக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon