மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

இறக்குமதியை இந்தியா குறைக்க வேண்டும்!

இறக்குமதியை இந்தியா குறைக்க வேண்டும்!

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது முழுமையாக நிறுத்த வேண்டும் என்று மூடீஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வைசஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வர்த்தகப் போரால் ஈரான் நாட்டுடனான வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனாவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில் ஈரான் நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 30 சதவிகிதமாக இருந்துள்ளது.

இந்நிலையில் இந்திய சுத்திகரிப்பாளர்கள் ஈரானுடனான தங்களது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மூடீஸ் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மூடீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் மாதங்களில் இந்திய சுத்திகரிப்பாளர்கள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்; அல்லது நிறுத்திவிட வேண்டும். அதற்குப் பதிலாக சவுதி அரேபியா, ஈராக் உள்ளிட்ட இதர நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகப்படுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

2017-18 நிதியாண்டில் இந்தியா மொத்தம் 220.4 மில்லியன் டன் அளவிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இதில் 9.4 சதவிகிதம் அளவு ஈரானிடமிருந்து பெறப்பட்டதாகும். அதேபோல, ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா இறக்குமதி செய்த 94.9 மில்லியன் டன் கச்சா எண்ணெயில் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது 14.4 சதவிகிதமாகும். ஈரானிலிருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய்க்குப் பேரல் ஒன்றுக்கு 2 முதல் 3 டாலர் சலுகையை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் வழங்குகிறது. அதேபோல, இறக்குமதி கட்டணத்திலும் சில சலுகைகளை ஈரான் வழங்குகிறது. ஆனால் இந்தியாவுக்கு எவ்வித சலுகையும் இதில் கிடைப்பதில்லை என்று மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon