மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

பாலிவுட்டில் புயலாகும் தனுஸ்ரீ புகார்!

பாலிவுட்டில் புயலாகும் தனுஸ்ரீ  புகார்!

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அடுக்கிய பாலியல் புகார்களால் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் பரபரப்புக் கிளம்பியது. தற்போது பாலிவுட் வட்டாரத்திலும் நடிகை தனுஸ்ரீயின் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தனுஸ்ரீ தமிழில் `தீராத விளையாட்டுப் பிள்ளை’ திரைப்படம் மூலம் பிரபலமானவர். இவர் சமீபத்தில் ஸூம் தொலைக்காட்சிக்கு (Zoom TV) அளித்த பேட்டியில், பாலிவுட் நடிகர் நானா படேகர் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிவித்தார். இதனையடுத்து இன்று (செப்டம்பர் 28) தனுஸ்ரீ தத்தா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார் நானா படேகரின் வழக்கறிஞர் ஷிரோத்கர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து அன்று என்ன நடந்தது என்பது பற்றி இயக்குநர் ராகேஷ் விவரித்துள்ளார். அதில், “ ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக தனுஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் பாடலின் ரிகர்சலின்போதே அதில் ஆண் குரலும் வருவதை தனுஸ்ரீ எப்படிக் கேட்காமல்போனார் என்று புரியவில்லை. கதைப்படி நானாவும் அந்தப் பாடலில் நடனம் ஆட வேண்டும். அன்றைய நாள் படப்பிடிப்பு தளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் எப்படி நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்திருக்க முடியும்? தனுஸ்ரீ நானா படேகர் குறித்து தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். அதன் பிறகு, அவருக்குப் பதில் Nathni Utaro பாடலுக்கு ராக்கி சாவந்த் நடனமாடினார்” என்று கூறியுள்ளார்.

நானாவுக்கு ஆதரவாக இயக்குநர் கருத்து தெரிவித்த நிலையில் அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் விவரித்துள்ளார். “நான் ஜேனிக்கா. 2008ஆம் ஆண்டு ‘ஆஜ் தாக்’ நிருபராகப் பணியாற்றினேன். பிரச்சினை நடந்ததாகக் கூறும் அன்று நானும் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன். அந்தப் படம் குறித்த முன்னோட்டத்தைப் பற்றி ரிப்போர்ட் செய்ய அங்கு நான் சென்றிருந்தேன். நான் அங்கு சென்றபோது தனுஸ்ரீ தன் அறையில் அழுதபடி அமர்ந்திருந்தார். படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தனுஸ்ரீ படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், மீண்டும் தனுஸ்ரீ கோபமாகத் தன் கேரவனுக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார். வெளியே வர மறுத்துவிட்டார். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அவரிடம் நான் பேச முற்பட்டேன். என்ன ஆயிற்று என்று கேட்டேன். அதற்கு தனுஸ்ரீ, ‘கடந்த மூன்று நாள்களாக இந்தப் பாடலுக்கு நான் நடனப் பயிற்சி செய்துவந்தேன். ஆனால், நடன இயக்குநர் இன்று திடீரென்று அனைத்து நடன அசைவுகளையும் மாற்றுகிறார். நானா என்னிடம் நெருக்கமாக இருப்பது போன்ற அசைவுகளை வைக்கிறார். முன்னறிவிப்பின்றி இவ்வாறு செய்வது முறையானதாக இல்லை. நானாவின் உத்தரவின் பேரில்தான் அந்த நடன அசைவுகளைப் பாடலுக்குள் புகுத்துகிறார்கள். பயிற்சியின்போது சொல்லிக்கொடுத்த நடன அசைவுகளைத் திடீரென மாற்றுவதற்குக் காரணம் என்ன’ என்று கூறினார்.

அதன் பிறகு, தனுஸ்ரீயின் பெற்றோர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவரை அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால், எங்கிருந்தோ வந்த அடியாட்கள் தனுஸ்ரீயின் காரை அடித்து நொறுக்கினர். நானா குறித்து தவறாகப் பேசக் கூடாது என்று மிரட்டல்தொனியில் சொன்னார்கள். இதுதான் அன்றைய தினம் நடந்தது. தனுஸ்ரீ கூறுவது அத்தனையும் உண்மைதான். அதற்கு நான் சாட்சி” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த இருவர் வெவ்வேறு மாதிரி வாக்குமூலம் அளித்துள்ளது பாலிவுட் வட்டாரத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் பிரியங்கா சோப்ரா, நடிகர் சித்தார்த் உள்ளிட்ட சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். நானா படேகருக்கும் பலர் ஆதரவு தெரிவித்து வரும் இவ்வேளையில், எதற்காக அப்போது பேசாமல், நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது இதை பற்றி பேசுகிறார். அதோடு அந்த பத்திரிகையாளர் அன்றே எழுதியிருக்கலாமே என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் , பெண் பத்திரிக்கையாளர் ஜேனிக்கா பதிவுக்கு, “இந்த யூகங்கள் நிறுத்தப்படவேண்டும். பிழைப்பு வாதத்திற்காக இது நடைபெறுகிறது” என்று ரீ ட்விட் செய்துள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon