மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 30 மே 2020

பெண்களுக்கு அனுமதி: தலைவர்கள் வரவேற்பு!

 பெண்களுக்கு அனுமதி: தலைவர்கள் வரவேற்பு!

அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (செப்டம்பர் 28) தீர்ப்பளித்தது. 10 வயது முதல் 50 வயது வரையிலான அனைத்துப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டுமே மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்.

சபரிமலைக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

‘ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்‘ என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.‬சமூக நீதி - பாலின சமத்துவம் - பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்.

தி.க தலைவர், கி.வீரமணி

5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு வரவேற்றுப் பாராட்டத்தக்க ஒன்றாகும். ஆண் - பெண் பாலின வேறுபாடு கூடாது என்ற அரசியல்சட்ட அடிப்படை உரிமைகளைச் சரியாகப் பாதுகாத்த ஒரு வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பே இது. சனாதனம் அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டதல்ல. பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல உரிமை மறுக்கப்படுவது, மனித உரிமைக் கோணத்தில் மாபெரும் தவறான நடவடிக்கையே. இதை மாற்றிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியான தீர்வே.செத்தது வைதீகம்.

விசிக தலைவர், திருமாவளவன்

உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். வழிபடும் உரிமைகள் மட்டுமின்றி அர்ச்சனை செய்வதிலும் பெண்களுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். அதற்கான பாதையை இந்த தீர்ப்பு அமைத்துத் தந்துள்ளது.

சபரிமலை வழக்கில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா அளித்துள்ள சிறுபான்மை தீர்ப்பில் அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பெரும்பான்மை தீர்ப்பிலேயே விடையுள்ளது என்பதால் இந்தத் தீர்ப்பை விரிவான அமர்வுக்கு எடுத்துச் செல்லவோ, சீராய்வு செய்யவோ தேவையில்லை.

மநீம தலைவர், கமல்ஹாசன்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். நான் இதுவரை கோயிலுக்கு சென்றதில்லை. ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்களை அனுமதிக்கலாம். கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம் என்பது பல்வேறு விதமாக விவரிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக,கடவுள் மனிதர்களைச் சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும் சட்டமன்றங்களும் இதைப் பின்பற்றி,பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.

சுப்ரமணியன் சுவாமி, பாஜக எம்.பி

சபரிமலையில் வழிபாட்டு முறைகளில் பாலின சமத்துவம் பேணப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon