மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

சிறப்புத் தொடர்: பாசிசம் - ஒரு புரிதலை நோக்கி… - 3

சிறப்புத் தொடர்: பாசிசம் - ஒரு புரிதலை நோக்கி… - 3

சேது ராமலிங்கம்

மொழி என்னும் பயங்கரமான ஆயுதம்

உலகம் முழுவதும் பாசிஸ்ட்டுகளும் பிற்போக்காளர்களும் மொழியைச் சிறப்பாகவே கையாண்டுள்ளனர். அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளைவிட மொழியின் வல்லமையை அருமையாகக் கையாளத் தெரிந்தவர்கள். ஹிட்லர் சிறந்த பேச்சாளர் என்று அவருடைய எதிரிகளே ஏற்றுக்கொள்வார்கள். மக்களின் மனதை ஈர்த்து அவர்களைப் பேச்சினால் கட்டிப்போடும் அற்புதமான உரை நிகழ்த்துபவர்களாக பாசிஸ்ட்டுகள்தான் இருந்துள்ளனர். முதல் உலகப் போர் காலகட்டத்திலிருந்தே ஊடகங்களின் மூலமாக மொழியை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு மொழி அறிஞர் நோம் சாம்ஸ்கி உலக வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்வை விளக்குகிறார்.

1916இல் முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது அமெரிக்காவில் உட்ரோ வில்சனின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது அமெரிக்க அரசும் போரில் ஈடுபட்டிருந்தது. ஆனால், அந்நாட்டு மக்கள் தங்களது நாடு போரில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஐரோப்பிய நாடுகள் நடத்தும் போரில் சம்பந்தமில்லாமல் நாம் ஏன் ஈடுபட வேண்டும் என நினைத்தனர். அவர்கள் அமைதியை விரும்பினார்கள். அரசின் நடைமுறைகள் மூலமாகப் போருக்கு மக்களின் ஆதரவைத் திரட்ட வில்சன் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தார். மக்கள் கண்டுகொள்ளவேயில்லை.

கடைசியில் ஊடகத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். கிரில் என்பவரின் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்து மொத்த ஊடகத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் அதற்கு அளித்தார். அனைத்துவிதமான பொய் பித்தலாட்டங்களையும் பரப்புரைகளையும் கையாண்டு மக்களிடம் போர் வெறியை உருவாக்கினார்.

ஆறே மாதங்களில் மக்கள் போர் வெறியர்களாக மாறினர். உலகினைக் காப்பாற்ற வேண்டுமானால் ஜெர்மானிய மக்களைக் கை வேறு, கால் வேறாக வெட்டிக் கொல்ல வேண்டும் என்ற வெறியைக் கொண்டார்கள். ஊடகங்களில் கையாளப்பட்ட மொழிதான் சமாதானத்தை விரும்பிய மக்களை ரத்த வெறி பிடித்த போர் வெறியர்களாக மாற்றியது (ஆதாரம்: Media Control by Noam Chomsky).

ஜெர்மனிக்கு எதிராகத் தன் மக்களை அமெரிக்கா தூண்டிவிட்டதை ஹிட்லர் தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு மேடையிலும் ஆவேசமாக உரையாற்றினார். ஹி்ட்லர் ஜெர்மனியின் ஆட்சிக்கு வந்தது வன்முறையாலோ அல்லது பலவந்தத்தினாலோ அல்ல. மொழியினால், அவரது உணர்ச்சிமிகு உரையாற்றும் திறனால் ஆட்சிக்கு வந்தார்.

ஹிட்லரின் எதிரிகள்கூட ஏற்றுக்கொள்ளும் விஷயம் ஹிட்லரின் சிறப்பான பேச்சாற்றல். தொடர்ச்சியான எழுச்சிமிகு உரையினால்தான் அவரை மக்கள் ஏற்றுக்கொண்டனர். 1932இல் நடந்த பொதுத்தோ்தலில் 14 மில்லியன் மக்கள் அவருக்கு வாக்களித்தனா்.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றதைப் பெரும் அவமானமாக மக்களை உணரவைத்தார். அந்த ஆவேசமான பேச்சைக் கேட்ட ஒவ்வொரு ஜெர்மானியரும் அவமான உணர்வால் பொங்கி, வெற்றி பெற்ற நாடுகள் மீது வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற போர் வெறி ஏற்பட்டது.

வெளி எதிரிகளை அடையாளம் காட்டிய ஹிட்லர், ஜெர்மனியில் வசிக்கும் யூதர்களை உள் எதிரிகளாக அடையாளப்படுத்தினார். யூதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று அவர் மக்களிடையே பேசினார். அவர்களைத் திருத்தவே முடியாது என்றும் அவர்கள் இருக்கும்வரை ஜெர்மன் நாடு வளரவே முடியாது என்றும் அழுத்தமாகச் சொன்னார்.

ஹிட்லர் தன் சொல்வன்மையால் மக்களின் சிந்தனையை வடிவமைத்தார். அனைத்து நாடுகளையும் ஜெர்மனி ஆள வேண்டும். ஜெர்மனியின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் யூதர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்னும் எண்ணங்களை ஜெர்மானிய மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதிய வைத்தார்.

இப்படித் தனது பாசிசக் கொள்கைகளை மக்களே விரும்பி மனதார ஏற்றுக்கொள்ள வைத்தார். ஹிட்லர் சொன்னால் மாடியிலிருந்து கேள்வி கேட்காமல் குதித்து உயிரிழந்த வீரர்கள் பலர். யூதர்களைப் பார்த்தாலே வெறுப்பு வரும் அளவுக்கு மக்களின் எண்ணங்களை மாற்றினார். இதன் மூலமாகவே யூதர்களுக்கு எதிரான மிகக் கொடூரமான இனப் படுகொலையை நிகழ்த்தினார்.

மனிதாபிமானமே முட்டாள்தனமாகும்

பாசிஸ்ட்டுகள் தனி நபர்களின் மிருக உணர்ச்சிகளைத் தூண்டுவதை இலக்காகக் கொள்வார்கள். ஹிட்லரின் உரைகளில் அறிவுபூர்மான தர்க்கத்தைக் காட்டிலும் உணர்ச்சிகரமான வாதங்கள் அதிகம் இருக்கும். அவர் மூனிச்சில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியைப் பாருங்கள்.

வெற்றிக்கு முதல் படியே தொடர்ந்து வன்முறையை இடைவிடாது முறையாகப் பயன்படுத்த வேண்டும். மனிதாபிமானம் என்பது முட்டாள்தனமாகும்; கோழைத்தனமானதும் ஆகும்.

மனசாட்சி என்பது யூதர்களின் கண்டுபிடிப்பு என்பார் ஹிட்லர். ஒரு பொய்யைப் பல முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற உத்தி ஹிட்லர் மற்றும் அவரது பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தியாகும். இதை இன்றுவரை உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்ட்டுகள் கடைப்பிடித்துவருகின்றனர்.

“பிரச்சாரத்தைப் புத்திசாலித்தனமாகவும் தொடர்ந்தும் மேற்கொண்டால் மக்களை நரகத்தைச் சொர்க்கமாகவும் சொர்க்கத்தை வாழவே தகுதியற்ற நரகமாகவும் பார்க்க வைக்கலாம்” என்பார் ஹிட்லர். இது அரசின் கொள்கையாகவே கோயபல்சின் மூலமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

மக்களின் மனங்களை எத்தகைய வன்முறையையும் ஏற்கும்படி தயார் செய்தார். ஒவ்வொரு முறை உரையாற்றும்போதும் யூதர்களை மட்டம் தட்டுவார். அவர்களை அருவருப்பான ஜந்துகளாகப் பார்க்கும்படி மக்களைத் தூண்டினார்.

யூதர்களின் நாளேடுகள் என்னும் நச்சுப்பாம்புகளின் ‘ஸ்ஸ்ஸ்’ என்னும் சீறொலியைக் காட்டிலும் 12 அங்குலக் கத்தியை மனித உடலில் குத்தும்போது வரும் சத்தம் கூர்மையாகக் காதுகளில் ஊடுருவும். எனவே அவர்களைச் சீறவிடுங்கள் என்பார்.

அனைத்து யூதர்களையும் கொல்ல வேண்டும் என்றும் அனைத்து நாடுகளையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் ஒவ்வோர் உரையிலும் கூறுவார்.

வெறுப்பாக மாறிய நேயம்

மனிதநேயத்துடன் அமைதியாக இருந்த ஜெர்மானியர்களின் மனங்கள் வெறி பிடித்தவர்களாக மாறின. இதனால் பல லட்சம் யூதர்கள் காட்டுமிராண்டித்தனமான முறையில் வதை முகாம்களில் கொல்லப்பட்டனர். ஒரு சிலரைத் தவிரப் பெரும்பாலான ஜெர்மானிய மக்கள் அதற்கு மௌன சாட்சியாக இருந்தனர்.

ஆனால், வரலாற்றில் அதற்கான விலையையும் கொடுத்தனர். மகத்தான வரலாறு கொண்ட ஜெர்மனியின் வரலாற்றுப் பக்கங்களில் படிந்த ரத்தக் கறைகளுக்குத் தாங்களும் உடந்தையாக இருந்தோம் என்ற குற்ற உணர்வு இன்று வரை அவர்களை உறுத்திக்கொண்டிருக்கிறது.

பாசிசத்தை நோக்கி ஆட்சி நகரும்போது அமைதி காப்பது இதே நிலையைத்தான் ஏற்படுத்தும் என்பதுதான் ஜெர்மனியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

ஜெர்மனியின் வரலாறு திரும்ப நிகழப்போகிறதா? இந்தியா அதற்கான களமாக மாறுமா? நாளை காண்போம்.

தொடரின் முதல் பகுதி

தொடரின் முதல் பகுதி

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon