மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகள்!

தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகள்!

சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டால் உடனடியாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆட்சிக்காலம் முடிய ஒன்பது மாதங்கள் இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்தார். ஆட்சியைக் கலைப்பதற்கான தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், ஆட்சியைக் கலைக்கும் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து சந்திரசேகர ராவ் காபந்து முதல்வராகத் தொடர்ந்து வருகிறார். இதனால் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே, மாநிலச் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், கலைக்கப்பட்ட நாளிலிருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வந்தது. அதன்படி நேற்று (செப்டம்பர் 27) புதிய விதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், “மாநிலச் சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டால், கலைக்கப்பட்ட நாளிலிருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். புதிய சட்டப்பேரவை அமையும் வரை தேர்தல் விதிகள் அமலில் இருக்கும். அதுவரை மாநில அரசு, புதிய திட்டங்களை அமல்படுத்தக் கூடாது. பொறுப்பு அரசாங்கம் சார்பில் எந்தவிதமான கொள்கை சார்ந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. இது மத்திய அரசுக்கும் பொருந்தும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1994இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், ஒரு பகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, முடிவடையும் வரை அங்கு ஆளும் கட்சியின் அனைத்து நலத்திட்ட உதவிகளும், அரசு சார்ந்த புது அறிவிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளே அமலில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon