மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

ஆசியக் கோப்பை: வரலாறு திரும்புமா?

ஆசியக் கோப்பை: வரலாறு திரும்புமா?

மின்னம்பலம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசியக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் இன்று (செப்டம்பர் 28) நடைபெறவுள்ளது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் சில தவறுகளால் வெற்றி கிட்டாமல் போனது. இருப்பினும் அந்த ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இறுதிப் போட்டி என்பதால் கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரைக் கொண்டு இந்தியா இம்முறை முழு பலத்துடன் களமிறங்க முயற்சி செய்யும்.

வங்கதேசத்தைப் பொறுத்தவரை இத்தொடரில் காயம் காரணமாக பல முன்னணி வீரர்களை இழந்து போராடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தமிம் இக்பாலுக்கு மணிக்கட்டு எலும்பு முறிந்து தொடரை விட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் காயமடைந்து வெளியேறினார். அந்த அணியின் தொடக்க வீரர்கள் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. மிடில் ஆர்டர் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் தற்போது இறுதிப் போட்டி வரை வந்திருக்கிறது.

கடந்த முறை ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையைக் கைப்பற்றியிருந்தது. தற்போது மீண்டும் இவ்விரு அணிகளும் மோதும் இன்றைய போட்டியிலும் வரலாறு திரும்புமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon