மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 செப் 2018

நமக்குள் ஒருத்தி: திரைகளைக் கிழிப்போம்!

நமக்குள் ஒருத்தி: திரைகளைக் கிழிப்போம்!

நவீனா

தற்காலச் சூழலில் பெண்கள் பொறுப்புகளைக் கையாளுவதில் சந்திக்கும் சிக்கல்கள் எண்ணிலடங்காதவை. பொறுப்புகள் என்று குறிப்பிடும்போது பெரிய பதவியில் இருக்கும் பெண்களுக்கான பிரச்சினைகள் என்ற நோக்கில் மட்டுமே எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அன்றாடம் குடும்பப் பெண்கள் வீட்டில் தனக்கான பொறுப்புகளை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதை உற்று நோக்குவதும் அவசியம்தான்.

யாருக்கானது அன்னையர் தினம்?

ஆங்கிலத்தில் வெளிவந்த சிறுகதை ஒன்றில் 'அன்னையர் தினம்' கொண்டாடுவதில் ஒளிந்திருக்கும் முரண் அழகான நகைச்சுவையோடு வெளிப்பட்டிருக்கும். அன்னையர் தினத்தைக் கொண்டாடுவதற்குக் குடும்பம் முழுவதும் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் ஒரு சுற்றுலாத் தலத்திற்குச் செல்வதற்காகத் திட்டமிடுவார்கள். அப்பா தொலைப்பேசியில் பக்கத்து ஊரில் வசிக்கும் மகளையும் உடன் வருமாறு அழைப்பார். மகள் வரும்போது தனது கணவனின் உறவினர் சிலரையும் தன்னுடன் அழைத்து வந்துவிடுவார். இப்படியாக ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். இறுதியில், பதினான்கு பேர் பயணிக்கக்கூடிய வண்டியில் பதினைந்து பேர் பயணிக்க வேண்டிய நிலை வந்துவிடும்.

என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது அம்மா தானாகவே முன்வந்து, 'நான் வீட்டில இருக்கேன். நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க. நீங்க திரும்ப ராத்திரி ரொம்ப நேரம் ஆகிடும். எல்லாரும் பசியா வருவீங்க. அதனால நான் வீட்டுல இருந்து சமையல் செஞ்சு வெக்கிறேன்' என்பார். குடும்பம் முழுவதும் அம்மாவை வீட்டில் விட்டு அன்னையர் தினம் கொண்டாடக் கிளம்பிவிடுவதுபோல் அந்தச் சிறுகதை முடிந்திருக்கும்.

இந்த நிகழ்வு சிறுகதையில் மட்டுமல்ல; நம் தினசரி குடும்ப வாழ்விலும் நடந்துவருவதாகத்தான் இருக்கிறது. சமூகம் சொல்லும் - அம்மா என்றால் தியாகம், அம்மா என்றால் அன்பு, அம்மா என்றால் கருணை என்பதை எல்லாம் பாராட்டுகளாகப் பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவை அனைத்தும் பெண்களைக் கட்டிப்போடப் பயன்படும் கைவிலங்குகள்.

மேற்கூறிய கதையில் அம்மா ஏன் தானாக முன்வந்து விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அந்தக் குணம் இயற்கையில் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மனநிலையைப் பெண்கள் மீது மட்டும் திணிக்கிறது.

தேவதைகளும் பேய்களும்

கில்பர்ட் மற்றும் கூபர் எழுதிய 'மேட் உமன் இன் த அட்டிக்' என்னும் தியரி இந்தச் சூழலை தெளிவுற விளக்குகிறது. பெண்கள் சமூகம் சொல்லுவதற்கு எல்லாம் சரி என்று சொல்லும்போதும், வீட்டில் மிச்சம் மீதிகளை உண்டுவிட்டுத் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்ளும்போதும், எல்லாவற்றுக்கும் விட்டுக் கொடுக்கும்போதும், ஏச்சு பேச்சுக்களை ஏற்றுக்கொண்டு அமைதி காக்கும்போதும், தேவதைகளாகப் பூஜிக்கப்படுகிறார்கள்.

ஆனால், தானாகச் சிந்திக்க ஆரம்பிக்கும்போதும், எதிர்த்துக் கேள்விகள் கேட்கும்போதும், நல்லது கெட்டதைப் பகுத்தறியக் கற்றுக்கொள்ளும்போதும், தன்மானத்தைக் காத்துக்கொள்ள விழையும்போதும், பேய்களாகவும் அடங்காப்பிடாரிகளாகவும் பெண்கள் சித்திரிக்கப்படுகிறார்கள். இதில் 'அடங்காப்பிடாரி' என்கிற வார்த்தைகூடப் பிரத்யேகமாகப் பெண்களுக்கென்று உருவாக்கப்பட்டதுதான். 'அடங்காப்பிடாரன்' என்றொரு வார்த்தை இல்லை என்பதையே இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

தன்னை அறிதல்

இத்தகைய நிலையில் சமூகம் பெண்களை நடத்தக் காரணம் என்னவென்று ஆராயும்போது அதில் பெண்கள் தாங்கள் தங்கள் மீது கொண்ட மனப்பான்மையும் முக்கியப் பங்காற்றுகிறது. தேவையற்ற பொறுப்புகளைத் தலையில் தூக்கிச் சுமக்கத் தயாராகிற பெண்கள்தான், தன் முன்னேற்றத்திற்கும் நிலைப்பாட்டிற்கும் உதவக்கூடிய பொறுப்புகளைக் கையாள மறுத்துத் தட்டிக்கழித்து விடுகின்றனர். வீட்டில் சமையல் வேலை, குழந்தை பராமரிப்பு போன்றவற்றில் ஆணுக்குப் பங்கே இல்லை என்று ஆண்கள் எண்ணுவது ஒருபுறம் இருந்தாலும், 'நான் இல்லன்னா என் பையன் தூங்கவே மாட்டான்', 'நான் சாம்பார் வெச்சா மட்டும்தான் என் கணவருக்குப் பிடிக்கும்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இதுபோன்ற பொறுப்புகளை ஆண்களுடன் பங்கிட்டுக்கொள்ளாமல் பெண்களே நிறைவேற்ற நினைக்கிறார்கள்.

காய்கறிக் கடைகளுக்குப் போக எப்போதும் தயாராக இருக்கும் பெண்கள்தான், 'எனக்கு அவசர வேலை இருக்குமா, நீயே ஏடிஎம் போய் பணம் எடுத்துட்டு வா' என்று சொல்லும் கணவரிடம் 'அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க' என்று மறுத்துவிடுகின்றனர்.

இவ்வாறான மனநிலை உடைய பெண்களை கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களிலும் இன்றும் பார்க்க முடிவது பரிதாபத்திற்குரியதே. பொறுப்புகளைக் கையாண்டு, எடுத்த செயலில் வெற்றி பெறுவதில் பெண்கள் கைதேர்ந்தவர்கள்தான். ஆயினும் எந்த வேலையைத் தானே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய வேண்டும், எந்த வேலையைக் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிந்துகொண்டால் மட்டுமே பெண்களின் சிறப்பு முழுமையாக உலகிற்கு வெளிப்படும்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர்: நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

5 நிமிட வாசிப்பு

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடல்!

3 நிமிட வாசிப்பு

பிரசித்தி பெற்ற கோயில்கள்  மூடல்!

வெள்ளி 28 செப் 2018