மின்னம்பலம்
இந்தியாவிலிருந்து சீனாவுக்குக் கப்பல் மூலமாக அனுப்பி வைப்பதற்கான அரிசியின் முதல் தொகுப்பு தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம், சீன சுங்க இலாகா பொது நிர்வாகம் மற்றும் இந்தியாவின் வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுத் துறை இடையே இந்த ஆண்டின் ஜூன் 9ஆம் தேதி கையெழுத்தானது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் உருவானது. இதன்படி இந்தியாவிலிருந்து முதற்கட்டமாக 100 டன் அளவிலான அரிசி சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் உள்ள 19 அரிசி ஆலைகள் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் பாசுமதி அல்லாத அரிசியை இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்குப் பதிவு செய்துள்ளன.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘100 டன் அளவிலான பாசுமதி அல்லாத சாதாரண அரிசியின் முதல் தொகுப்பு நாக்பூரிலிருந்து கப்பல் மூலமாகச் சீனாவுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி (இன்று) அனுப்பி வைக்கப்படவுள்ளது. சீன அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான, சீன தேசிய உணவு தானிய, எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் நிறுவனம் இந்த முதல் தொகுப்பைப் பெற்றுக் கொள்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. அரிசி இறக்குமதியில் சீனா முன்னிலையில் உள்ளது. அதேபோல, அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.