மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?வெற்றிநடை போடும் தமிழகம்

சூழல் பிரச்சினையால் பொருளாதாரத்துக்கும் ஆபத்து!

சுற்றுச்சூழலைத் தவிர்த்துவிட்டு வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதுகூட அறிவியலற்ற வாதம். சுற்றுச்சூழல் குறித்த கவலை இல்லாமல், வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுபவர்களின் கவனத்திற்கு இந்தத் தகவல்: கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு பொருளாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு செலவுக்காக ஒவ்வோர் ஆண்டும் 210 பில்லியின் அமெரிக்க டாலர் வரை செலவழிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது 21 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது கார்பன் டை ஆக்சைடால் ஏற்படும் சுற்றுச்சூழல் இழப்புக்காக ஒவ்வோர் ஆண்டும் நாம் 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.

வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவு, கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக 400 ppm (Parts per million) என்ற அளவில் இருந்த கரியமில வாயுவானது கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 412.03 ppm ஆக உயர்ந்திருக்கிறது. 405 என்பதே அபாயக் கட்டம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கும்போது, 412 ஆக உயர்ந்திருப்பது கண்களுக்குத் தெரியாத பல மாற்றங்களை பூமியில் நிகழ்த்தி வருகிறது. இது சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளைப் பற்றிக் கவலை இல்லாவிட்டாலும், பொருளாதாரத்தில் இதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்காவது நாம் காதுகொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அபாய நிலையில் இந்தியா

கலிபோர்னியாவின் சன் டியாகோ பல்கலைக்கழக (University of California San Diego) ஆய்வாளர்களின் கூற்றுப்படி, காலநிலை மாற்றத்தால் அதிகமான பொருளாதார பாதிப்புகளைச் சந்திக்கும் நாடுகளில் முதல் மூன்று இடங்களில் இருப்பது அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா. உலக அளவில், அமெரிக்காவுக்குப் பிறகு காலநிலை மாற்றத்தால் மிக அதிகமான பொருளாதார பாதிப்புகளைச் சந்திக்கக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது.

இதனால் ஏற்படப்போகும் பேரிழப்புகள், வளரும் நாடான இந்தியாவுக்கு வளர்ச்சியில் மிகப் பெரிய முட்டுக்கட்டை போடும் என்பது நிச்சயம். எனவே, எரிபொருள் உற்பத்திக்கான இயற்கைசார் வழிகள் அல்லது மாற்றுப் பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது.

தவறு என்பது எல்லா வகையிலும் எல்லாத் துறைகளிலும் தவறுதான். எனவே, கூடிய விரைவில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுத்தே ஆக வேண்டும்.

- நரேஷ்

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon