மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

அதிகாரப் போட்டிகளும் உணர்ச்சி மோதல்களும்!

அதிகாரப் போட்டிகளும் உணர்ச்சி மோதல்களும்!

அன்னம் அரசு

திரை விமர்சனம்: செக்கச்சிவந்த வானம்

நிழல் உலக சாம்ராஜ்யத்துக்கான அதிகாரப் போட்டிதான் செக்கச்சிவந்த வானம்.

‘காட்ஃபாதர்’ சேனாதிபதி (பிரகாஷ் ராஜ்) சுமார் முப்பது ஆண்டுகளாகக் கள்ளக் கடத்தல், அடிதடி, மணல் மாஃபியா ஆகிய செயல்களின் மூலம் வளர்ந்தவர். அரசு, காவல் துறை என எங்கும் அவருடைய ஆட்கள். அவரது மகன்கள் வரதராஜன் (அரவிந்த் சுவாமி), தியாகராஜன் (அருண் விஜய்), எத்திராஜ் (சிலம்பரசன்). வரதராஜன் அப்பாவுடன் இருந்து ‘தொழில்’ செய்துவருகிறான். தியாகு துபாயிலும், எத்திராஜ் செர்பியாவிலும் இருந்தபடி நிழலான பல வேலைகளைச் செய்துவருகிறார்கள்.

சேனாதிபதியையும் அவரது மனைவியையும் கொல்லத் திட்டமிட்டது யார் என்பதைக் கண்டுபிடிக்க அவர் மகன்கள் துடிக்கிறார்கள். கைதி ஒருவனைத் தாக்கியதற்காக சஸ்பென்ஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ரசூல் (விஜய் சேதுபதி), வரதனின் பால்யகால நண்பன். ரசூலின் உதவி வரதனுக்குக் கிடைக்கிறது. சேனாதிபதியின் எதிரியான சின்னப்ப தாஸ் (தியாகராஜன்) மேல் சந்தேகம் எழுந்து மகன்கள் மூவரும் அவரோடு மல்லுக்கட்டுகிறார்கள்.

இவர்களுக்குள் நடக்கும் மோதல்களுக்கு நடுவே, சேனாதிபதிக்குப் பிறகு யார் என்ற போட்டி எழுகிறது. சேனாதிபதியைக் கொல்ல முயன்றது யார், அடுத்து யார் தலைவர் என்ற கேள்விக்குப் பல திருப்பங்களுடன் பதில் சொல்கிறது படம்.

சேனாதிபதி தனது மனைவியுடன் அன்பாகப் பேசிக்கொண்டு கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது ஆரம்பமாகும் அதிர் வேட்டு படத்தின் முடிவு வரை தொடர்கிறது.

எளிய கதைக் களனைக் கொண்டு பெரிய நடிகர் பட்டாளத்துடன் களமிறங்கியிருக்கும் இயக்குநர் மணிரத்னம் அனைவரையும் மனதில் பதிய வைத்திருக்கிறார். குற்றப்பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில் உறவுகள் சார்ந்த உணர்ச்சிகளுக்கும் உரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சேனாதிபதியைக் கொல்ல முயன்றது யார் என்ற கேள்வியுடன் ஏன் என்னும் கேள்வியையும் சேர்த்துக்கொண்டு திரைக்கதை பயணிக்கிறது. கூடவே நட்பு, காதல், மண உறவு, ரகசியக் காதல், தொழில் போட்டி, காவல் துறையின் காய் நகர்த்தல்கள் ஆகிய அம்சங்களும் சேர்ந்துகொள்வதால் படம் தட்டையாக மாறாமல் மாறுபட்ட பரிமாணங்களை எடுக்கிறது.

இரண்டு குழுக்களுக்கிடையே இருக்கக் கூடிய பகையும் தொடர்பும், அண்ணன் தம்பிக்குள் இருக்கும் உறவும் முரண்களும், அவரவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சொல்லப்படாத பக்கங்கள் என்று வெவ்வேறு புள்ளிகளினூடே கோலம் போட்டபடி நகர்கிறது திரைக்கதை. இவை எல்லாம் படம் போகும் திசையைப் பற்றிப் பல யூகங்களை எழுப்பினாலும் சற்று நுணுக்கிப் பார்க்கும்போது படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை அறியலாம்.

பாத்திரங்களைச் செதுக்கிய விதத்தில் இயக்குநர் தன் முத்திரையைப் பதிக்கிறார். மூன்று சகோதரர்களின் ஆளுமை வித்தியாசங்கள், சேனாதிபதியின் குணம், அவருடைய மனைவியின் இயல்பு, வரதனின் மனைவி, காதலி, நண்பன் என்று பாத்திரங்களின் வகைமைகள் படத்துக்கு வண்ணம் சேர்க்கின்றன. ஜோதிகா, ஜெயசுதா ஆகியோரின் பாத்திரங்கள் அழுத்தமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. விஜய் சேதுபதியின் பாத்திரம் சுவாரஸ்யமானது.

இத்தனை அதிர்வேட்டுகளும் கொலைகளும் சர்வசாதாரணமாக நடக்கும்போது காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழாதவண்ணம், பின்னணியில் அது மறைமுகமாக இயங்குவதாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால், சென்னையிலும் புதுச்சேரியிலும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை போன்று குண்டுகள் முழங்கும்போது அந்த இடங்களில் காக்கிச் சட்டையின் ஒரு நூல் கூடத் தென்படாமல் இருப்பது அபத்தம்.

துப்பாக்கிச் சூடு முடிந்த பிறகு, காவலர்களை விட்டுவிட்டுச் சுட்டவனிடமே கேள்வி கேட்கிறார் ஒரு பத்திரிகையாளர். பிறகுதான் தெரிகிறது அந்தப் பெண் பத்திரிகையாளருக்கும், வரதனுக்கும் உள்ள உறவு. எதனால் அந்தப் பத்திரிகையாளர் வரதனிடம் நெருங்குகிறார் என்பதற்கான பதிலை இறுதியில் பார்வையாளர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார் இயக்குநர்.

கேங்ஸ்டர் படத்திலும் மனதைத் தொடும் வண்ணம் சில காட்சிகள் உள்ளன. பிரகாஷ் ராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடக்கும் உரையாடல், அரவிந்த்சுவாமி - ஜோதிகா – அதிதி ராவ் ஆகியோருக்கிடையேயான உறவும் முரணும், சாயா - சிம்பு உறவு. சிம்பு தன் அம்மாவுடன் பேசும் காட்சி, ஜோதிகாவும் அதிதியும் சந்திக்குமிடம், கடைசியில் சிம்புவும் அருண் விஜய்யும் பேசுவது, விஜய் சேதுபதியின் தனிப்பட்ட வாழ்க்கைப் பின்னணி ஆகிய அம்சங்கள் குற்றவியல் பின்னணி கொண்ட திரைப்படத்திற்கு மாறுபட்ட பரிமாணத்தை வழங்குகின்றன.

படம் கண்கவரும் விதத்தில் இருந்தாலும், படத்தோடும் பாத்திரங்களோடும் ஒன்றமுடியாத அளவுக்குச் செயற்கைத் தன்மை படத்தின் மீது திரையாகப் படர்ந்திருக்கிறது. கதையில் பல முடிச்சுகள் இருந்தாலும், ஆதாரமான கதை மேலோட்டமானது என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் சண்டைகளாய் மட்டுமே நகர ஆரம்பித்துவிடுகிறது. சென்னையில் இந்த அளவு துப்பாக்கிச் சூடு நடப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. மாபெரும் சாம்ராஜ்ஜியத்தையே தன் கையில் வைத்திருப்பதாகச் சொல்லப்படும் வரதனின் சரிவும், ஆட்கள் சட்டென்று அணி மாறுவதும் நம்பகத்தன்மையோடு சித்திரிக்கப்படவில்லை. திரையில் காட்சிகள் பரபரப்பாக ஓடினாலும் பார்வையாளர்களிடத்தில் எந்தப் பரபரப்பும் தொற்றிக்கொள்வதில்லை. படத்தின் தொடக்கத்தில் கேட்கப்படும் கேள்விக்குக் கடைசியில் விடை கிடைக்கும்போது அது பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. கடைசித் திருப்பம் மட்டும் ‘அட’ போட வைக்கிறது.

ரஜினி, கமல் யாராக இருந்தாலும் தனது பாணிக்கு இழுக்கும் மணிரத்னம், விஜய் சேதுபதியை அவர் பாணியிலேயே நடிக்க வைத்திருக்கிறார். பாத்திர வார்ப்பும்கூட விஜய் சேதுபதிக்கும் பழக்கமான ஒன்றுதான். வேட்டுச் சத்தங்கள், ஆக்ரோஷமான அடிதடிகளுக்கு நடுவே தனக்கே உரிய நக்கல் நையாண்டியுடன் அமைதியாகவே வந்து ரசிகர்களைக் கவர்கிறார் விஜய் சேதுபதி.

பிரகாஷ் ராஜ், அரவிந்த் சுவாமி , ஜெயசுதா நடிப்பில் முதிர்ச்சி. ஜோதிகாவை அளவாகவும் அழகாகவும் நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம். சிம்பு, அருண் விஜய் ஆகியோர் மாஸ் ஸ்டைலில் மிரட்டியிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நேர்த்தி இருந்தாலும் அவரது இலங்கைத் தமிழ் உயிரோட்டமாக இல்லை. அதிதி ராவ் தனது சிறிய பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். டயானா எரப்பா ஒரு சில நிமிடங்களில் பளிச்சென்று மின்னி மறைந்துபோகிறார்.

காட்சி அமைப்பும் ஒளிப்பதிவும் சண்டைக் காட்சிகளும் இதைச் சராசரித் தமிழ்ப் படத்திலிருந்து மேலே உயர்த்துகின்றன. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பங்களிப்பு அற்புதம். சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயனின் பங்கும் அளப்பரியது. முதன்முறையாக மணிரத்னம் படத்தில் பாடல் எதுவும் எடுபடவில்லை. பின்னணி இசையில் தன் கற்பனை வளத்தைக் காட்டியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களில் ஏமாற்றியிருக்கிறார். பல பாடல் வரிகள் பின்னணி இசையாகவே பயன்படுத்தப்பட்டுத் தாக்கம் ஏற்படுத்தாமல் கரைந்து போகின்றன. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு படத்தைக் கச்சிதமாக ஆக்கியிருக்கிறது. மணிரத்னமும் சிவா அனந்த்தும் இணைந்து எழுதியிருக்கும் வசனங்களில் மணிரத்னத்தின் வழக்கமான ‘செயற்கைச் சிக்கனம்’ இருந்தாலும் சில உரையாடல்கள் வலிமையாக உள்ளன.

குற்றவியல் பின்னணி கொண்ட கதையை எடுத்துக்கொண்டு, அதில் பாசாங்குகள் எதையும் கலக்காமல் இயல்பான உணர்ச்சிகளுடன் இணைத்து விறுவிறுப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon