மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

மணல் திருட்டு பேரம்: ஆய்வாளர் சஸ்பெண்ட்!

மணல் திருட்டு பேரம்: ஆய்வாளர் சஸ்பெண்ட்!

மணல் கொள்ளையர்களிடம் பேரம் நடத்தியதாக ஆடியோ வெளியானதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் முகமது நசீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள தத்தங்குடி கண்மாயில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, பொக்லைன் மூலம் மணல் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து பரமக்குடி சார்ஆட்சியர் விஷ்ணுசந்திரனிடம் மக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து கனிமவளத் துறை அதிகாரிகள் அந்தக் கண்மாயில் ஆய்வு செய்து, மணல் கொள்ளை நடந்ததை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, விஷ்ணுசந்திரனும் பல இடங்களில் நேரில் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலைய ஆய்வாளரான முகமது நசீர், தத்தங்குடி மணல் திருட்டில் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் பணம் கேட்டு பேரம் பேசியதாகச் சமீபத்தில் ஓர் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. எத்தனை முறை மணல் திருட்டு நடைபெற்றது என்றும், அதற்காக எவ்வளவு பணம் தர வேண்டுமென்றும், அவர் பேரம் பேசும் தகவல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இது வாட்ஸ் அப்பில் வேகமாகப் பரவியது.

இது தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிட்டார் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா. இதையடுத்து, அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. துறை ரீதியாக நடந்த விசாரணையின் எதிரொலியாக, காவல் ஆய்வாளர் முகமது நசீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நேற்று (செப்டம்பர் 27) இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார் ராமநாதபுரம் சரகக் காவல் துறை துணைத்தலைவர் காமினி.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon