மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

திவ்யா ஸ்பந்தனா மீது கோவையில் புகார்!

திவ்யா ஸ்பந்தனா மீது கோவையில் புகார்!

பிரதமர் மோடி குறித்து அவதூறாகக் கருத்து பதிவிட்டு வருவதாகக் கூறி திவ்யா ஸ்பந்தனா மீது கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா நடிப்புக்குப் பின்னர் காங்கிரசில் இணைந்த அவர் அக்கட்சி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துளளர். தற்போது காங்கிரசின் சமூக வலைதளக் குழுவிற்குப் பொறுப்பாளராக இருக்கிறார். இவர் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாகக் கருத்து பதிவிட்டிருந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சையது ரிஸ்வான் அகமது அளித்த புகாரின் பேரில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் நேற்று (செப்டம்பர் 27) திவ்யா தனது ட்விட்டர் பக்கத்தில், தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் (#ModiAmbaniRafaleBlockbuster

ThugsOfHindostanTrailer) என்ற பாலிவுட் படத்தின் தலைப்பை ஹாஷ்டாகாகப் பதிவிட்டு, ‘ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு மோடி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் அவர், பகிர்ந்துள்ள படத்தில் ஆமிர் கான் “துரோகம் என் இயல்பிலேயே உள்ளது” என்று சொல்வதாக உள்ளது.

அதாவது ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்குத் துரோகம் செய்துவிட்டார் என்று பொருள்படும்படி அந்த ட்வீட் உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வரும் நிலையில், திவ்யாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி தமிழக பாஜக பொறுப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.சேகர், கோவை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அவர் தனது புகாரில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon