மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

சர்ச்சைப் பேச்சு: அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்!

சர்ச்சைப் பேச்சு: அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்!

நாக்கு அழுகிவிடும் என்று கிராமத்துப் பாணியில் சொல்வதற்குப் பதிலாக, தவறுதலாக நாக்கை அறுத்துவிடுவேன் என்று சொல்லிவிட்டதாக அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்துள்ளார்.

திமுக - காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, தமிழகத்தில் தற்போது பொற்கால ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்றும், ஆட்சியைப் பற்றி தவறாகப் பேசினால் நாக்கை அறுத்துவிடுவேன் என்றும் பேசியிருந்தார். இதற்குத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ‘நானும்தான் அதிமுக அரசை விமர்சித்திருக்கிறேன். அதற்காக எனது நாக்கையும் அறுப்பார்களா?’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார்.

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் துரைக்‍கண்ணு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி, தஞ்சை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், அம்மா மக்‍கள் முன்னேற்றக் ‍கழக வழக்‍கறிஞர்கள் சார்பில் நேற்று புகார் மனுவும் அளிக்‍கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று (செப்டம்பர் 27) தஞ்சையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அரசை தவறாகப் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று கிராமத்துப் பாணியில் சொல்வதற்குப் பதில், தவறுதலாக இதுபோன்ற வார்த்தை வந்துவிட்டது. அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வேண்டுமென்றோ அல்லது யாரையும் குறிப்பிட்டோ இதனை நான் சொல்லவில்லை. தவறுதலாக வந்த அந்த வார்த்தைக்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பாக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்திருந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், அந்தப் பேச்சை அமைச்சர் தவிர்த்திருக்கலாம் என்று பதிலளித்தார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon