மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

சிறப்புக் கட்டுரை: ஆதார் தீர்ப்பில் விடை கிடைக்காத கேள்விகள்!

சிறப்புக் கட்டுரை: ஆதார் தீர்ப்பில் விடை கிடைக்காத கேள்விகள்!

பா. சிவராமன்

உச்ச நீதிமன்றம் ஆதாரை முற்றிலுமாக அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என நிராகரிக்காதது அந்தரங்க உரிமை சார்ந்த செயற்பாட்டாளர்களுக்குச் சற்று ஏமாற்றம்தான். ஆனால், அரசு இயந்திரத்தை வேவுபார்க்கும் கண்காணிப்பு அமைப்பாகவும் இந்திய ஜனநாயகத்தை டிஜிட்டல் கொடுங்கோன்மையாகவும் மாற்றுவதற்கு ஆதாரை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பலத்த அடியாகும்.

இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்பதற்காக முயற்சி செய்துவரும் அனைவருக்கும் இது ஒரு முதல் வெற்றியே. நிலையான முழு வெற்றிக்கு அவர்கள் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது.

இத்தீர்ப்பின் முக்கியமான சாதக அம்சம், உச்ச நீதிமன்றம் ஆதார் சட்டத்தின் பிரிவு 57ஐ அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று நிராகரித்து அதைத் தள்ளுபடி செய்ததாகும். அதாவது ஆதாரைத் தனியார் கம்பெனிகள் தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று ஆதார் சட்டம் அனுமதித்திருந்ததை இத்தீர்ப்பு தடை செய்துள்ளது. மேலும், அரசாங்கம் தனது குடிமக்களையே வேவு பார்ப்பதற்கு எதிராக ஆரம்ப நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தொடங்கியுள்ளது.

இது ஒரு முதல் படியே. ஆனால், மிகவும் ஆதாரமானது. இதன் விளைவுகள் எப்படியிருக்கும்? ஆதாரை ஆதாரமாகக் கொண்டு அனைத்துத் தனிநபர் விவரங்களையும் மொத்தப் பொருளாதாரத்தின் அனைத்துப் பரிமாற்ற விவரங்களையும் தனியார் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து அந்நிறுவனங்கள் மூலமாக இந்தியப் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் இத்தீர்ப்பின் இந்த முடிவால் அடிவாங்குமா? இந்த ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பரிசீலிப்போம்.

அடித்து நொறுக்கப்பட்ட பிரிவு 57

ஆதார் சட்டத்தின் பிரிவு 57 கூறியது என்ன? அதை வெட்டி தூக்கியெறிந்ததற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்த காரணம் என்ன?

ஆதார் சட்டத்தின் பிரிவு 57 கூறியதாவது:

“57. இந்தச் சட்டத்தில் உள்ள எதுவுமே எந்த நோக்கத்திற்காயினும் சரி, ஒரு தனிநபரின் அடையாளத்தை நிறுவ அரசோ அல்லது எந்த கார்ப்பரேட் அமைப்போ அல்லது தனிநபரோ ஆதார் எண்ணைத் தற்போது நடப்பிலுள்ள எந்தச் சட்டத்தின்படியும் அல்லது இதற்காக ஏற்படுத்திக்கொண்ட எந்த ஒப்பந்தத்தின்படியும் பயன்படுத்திக்கொள்வதைத் தடுக்காது.”

இது குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுவதாவது:

“பிரிவு 57இன் சில பகுதிகள் மிகவும் பாதிப்பு உருவாக்கக் கூடியதாக இருப்பதால் அதை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கிறோம்.” (தீர்ப்பில் பக்கம் 282)

“கார்ப்பரேட் அமைப்புகளையும் தனிநபர்களையும் தனிநபர் அடையாளத்தை ஆதார் அடிப்படையில் உறுதிசெய்ய செய்ய அனுமதிக்கும் பிரிவு 57இன் பகுதியை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறுகிறோம்.” (தீர்ப்பில் பக்கம் 293)

“முதல் பார்வையில் இது ஓர் ஆபத்தற்ற ஷரத்தாகத் தோன்றலாம். ஆதார் எண்ணை உடையவர் அதை எந்த நோக்கத்துக்காகவும் பயன்படுத்த இது அனுமதிக்கிறது. ஆதார் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டும் இல்லாமல் வேறு எந்த நோக்கத்துக்காகவும் அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இது தனிநபர்களின் அந்தரங்கத்துக்குள் ஆழமாகப் பிரவேசிக்கிறது என மனுதாரர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கருத்துபடி இந்தச் சட்டப் பிரிவின் களங்கம் என்னவென்றால் அவர்களுடைய அந்தரங்கத்துக்குள் நுழைய அரசுக்கு மட்டுமின்றி தனியாருக்கும் கட்டற்ற வாய்ப்புகளை இது அளிக்கிறது. ‘எந்த நோக்கத்திற்காகவும்’ என்பது தவறாகப் பயன்படுத்தப்படலாம். மேலும் ஆதார் எண்களைத் தனியார் சேவை வழங்குவோர் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதால் ஒரு கண்காணிப்பு அரசை நிறுவுவது ஏதுவாகிறது. மேலும் (கைரேகை மற்றும் கண்ணிமைகள் போன்ற) பயோமெட்ரிக் விவரங்கள் வணிகரீதியாகச் சுரண்டப்படுவதற்கு இது வழிவகுக்கிறது”. (பக்கம் 428)

“நாடாளுமன்றம் இந்த நோக்கத்தோடு இதை இயற்றவில்லையென்றாலும், ஆதார் சட்டப் பிரிவு 57ஐ தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும். தனிநபர் பயோமெட்ரிக் தகவலைத் தனியார் நிறுவனங்கள் வணிகரீதியாகச் சுரண்ட வழிவகுக்கும் (பக்கம் 560). எனவே, இதை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கிறோம்”. (பக்கம் 561)

தீர்ப்பின் விளைவுகள்

உச்ச நீதிமன்றம் ஆதாரைத் தனியாருக்கு பயன்படுத்தக் கொடுப்பதைத் தடை செய்துள்ளதன் விளைவுதான் என்ன? இதனால் அரசாங்கத்தின் எந்தெந்தத் திட்டங்களும் எந்தெந்த முடிவுகளும் அடிவாங்கும்? இதைப் பரிசீலிக்க முதலில் பிரதமர் மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு வருவோம்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் வாக்கில் 128 கோடி இந்தியர்களில் பயோமெட்ரிக் அடையாளங்களைப் பதிவு செய்துகொண்டு அவர்களுக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு கூடவே சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் நாட்டில் அன்றாடம் நடைபெறும் கோடிக்கணக்கான பரிமாற்றங்கள் ஒவ்வொன்றுக்குமான ரசீதுகள் பரிவர்த்தனை செய்துகொண்டவர்களின் ஆதார் எண் அடையாளத்துடன் GSTN சூப்பர் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த விவரங்கள் அனைத்தும் Big Data என்று அழைக்கப்பட்டு ஜிஎஸ்டி நெட்வொர்க் (GSTN) என்ற அமைப்பால் ராட்சத சர்வர்களில் கிளவுட் (cloud) என்ற தொழில்நுட்பத்தால் சேமிக்கப்பட்டு வைக்கப்படுகிறது. டேட்டா அனெலிடிக்ஸ் (Data Analytics) என்ற தொழில்நுட்ப முறையால் இது பகுப்பாய்வு செய்யப்படுகிறது. யார் யார் வரி கட்டினார்கள், யார் யார் கட்டத் தவறினார்கள், யார் எவரோடு என்ன வணிகப் பரிவர்த்தனையில் ஈடுபட்டார்கள் எனச் சில நொடிகளில் தொகுத்துக் கூறும் முறை இது. இது இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி ஆதாரை அடிப்படையாகக் கொண்ட புள்ளிவிவர இமயமலை. இது யார் கட்டுப்பாட்டிலிருக்கும்?

முதலில் GSTN முற்றிலுமாக ஒரு தனியார் கம்பெனியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள்ளிருந்தே சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அது அரசு நிறுவனமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. அப்போதும்கூட அதன் 49% பங்குகள் மட்டுமே அரசிடம் (24.5% மத்திய அரசிடமும் 24.5% மாநில அரசுகளிடமும்) இருக்கும். ஆனால் GSTN செயல்படுவதற்கான மென்பொருளைத் தயாரித்து அதைப் பராமரிப்பது இன்போசிஸ் என்ற தனியார் நிறுவனம். அதுமட்டுமல்ல. GSTN, ஜிஎஸ்டி வரிகட்ட வியாபாரிகளுக்கு உதவ, எளிதில் ஜிஎஸ்டி வரி கட்ட உதவுபவர்கள் (GST Suvida Providers) என்ற தனியார் கம்பெனிகளை ஏஜெண்டுகளாக நியமித்துள்ளது.

இந்த சுவிதா புராவைடர்ஸ் GSPs அப்ளிகேஷன் சர்வீஸ் புரொவைடர்ஸ் (ASPs) என்ற மென்பொருள் விற்பனையாளர்களையும் கணக்கர்களையும் தணிக்கையாளர்களையும் ஏஜெண்டுகளாகக் கொண்டிருக்கின்றனர். கோடிக்கணக்கான வியாபாரிகளால் ஜிஎஸ்டி வரி பெரும்பாலும் இந்த GSPs மற்றும் ASPs வாயிலாகத்தான் செலுத்தப்படுகிறது. அதாவது ஜிஎஸ்டி டேட்டாவானது இவர்கள் மூலமாகத்தான் GSTNஐச் சென்றடைகிறது. இவர்கள் தங்கள் டேட்டாக்களை எந்த கிளவுட்டில் சேமிக்கிறார்கள்? இவர்களுக்கான கிளவுட் சேமிப்பு சேவையை மைக்ரோசாஃப்ட் என்ற நிறுவனத்தின் ஒரு பிரிவான மைக்ரோசாஃப்ட் அஸுர் என்ற தனியார் நிறுவனம் வழங்குகிறது.

கூகுளின் பங்கு என்ன?

அது மட்டுமல்ல; ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்ட கோடிக்கணக்கான வணிகர்களின், உற்பத்தியாளர்களின் ஜிஎஸ்டி விவரங்கள் அனைத்தும் கூகுள் என்ற தனியார் நிறுவனத்தின் வாயிலாகத்தான் பெரும்பாலும் GSTNஐச் சென்றடைகிறது. ஆதார் அடிப்படையிலான ஜிஎஸ்டி டேட்டா மீதான தனியார் ஆதிக்கம் இதோடு நின்றுவிடவில்லை.

21 ஏப்ரல் 2017 அன்று, இந்திய மின்னணுவியல் மற்றும் IT அமைச்சகம் அனைத்து அரசு இலாகாக்கள் மற்றும் அரசின் கீழ்வரும் ஏஜென்சிகள் ஆகியவற்றின் டேட்டா அனைத்தும் எந்தெந்த தனியார் கம்பெனிகளின் Big Data Cloud சர்வர்களில் சேமித்துவைக்கப்பட வேண்டும் என ஒரு பட்டியலிட்டது. இந்தப் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன், ஹியூலெட் பேகார்ட், ஐபிஎம் இந்தியா, டாடா கம்யூனிகேஷன்ஸ், BSNL, HP-நெட் மேஜிக் IT சர்வீசஸ், சிஃபி டெக்னோலஜீஸ் மற்றும் எஸ்செல் - கண்ட்ரோல் டேட்டா மையங்கள் ஆகிய எட்டு நிறுவனங்கள் இடம் பெறுகின்றன. எகனாமிக் டைம்ஸின் வந்த ஒரு செய்தி இதைத் தெளிவாகக் கூறுகிறது. இதில் பிஎஸ்என்எல் தவிர ஏனைய அனைத்தும் தனியார் நிறுவனங்கள். நான்கு அயல்நாட்டு நிறுவனங்கள். அதாவது இந்திய அரசின் டேட்டா அனைத்தும் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் அதுவும் அந்நியப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுச் சேமித்துவைக்கப்படும். GSTN டேட்டாவும் இயல்பாகவே இதில் அடங்கும். தங்களை இந்து தேசியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்களின் தேசபக்திக்கு இதுதான் எடுத்துக்காட்டு போலும்.

இது குறித்து விமர்சனம் எழுந்தவுடன், இந்த டேட்டா இந்தியாவுக்குள்ளேயே சேமித்துவைக்கப்பட வேண்டும் என நிபந்தனை போடப்படுகிறது. இணையம் மூலமாக டேட்டா கடல் கடந்து செல்வதைத் தடுக்க முடியுமா என்ன?

இப்போது ஆதாரைப் பயன்படுத்திடுவது இயலாத வகையில் தனியார் கம்பெனிகள் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருப்பதால் இந்த ஏற்பாட்டின் கதி என்ன? தனியார் கையில் ஆதாரோடு இணைந்த டேட்டா புழங்கினால் அது சட்ட விரோதமாயிற்றே? உச்ச நீதிமன்றத் தடை இதற்கும் பொருந்துமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(இந்தத் தீர்ப்பின் வேறு சில அம்சங்கள் குறித்த அலசல்கள் நாளை)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon