தீபாவளி பண்டிகைக்காக, சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு 22,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக நேற்று (செப்டம்பர் 27) மாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதியன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, சென்னையிலிருக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த நேரத்தில், பேருந்துகளில் மக்கள் நெரிசல் ஏற்படும். இதுபோன்ற இன்னல்களைத் தவிர்ப்பதற்காக ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இந்தாண்டும் சென்னையிலிருந்து 22,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவம்பர் 3, 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நாளொன்றுக்கு 4,000 வீதம் 12,000 பேருந்துகளும், மற்ற மாவட்டங்களிலிருந்து 10,000 பேருந்துகளும் இயக்கப்படும். கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கடந்தாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.