மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

ஜிஎஸ்டி: மக்களுக்கான வரியாக மாற்றியமைக்கப்படும்!

ஜிஎஸ்டி: மக்களுக்கான வரியாக மாற்றியமைக்கப்படும்!வெற்றிநடை போடும் தமிழகம்

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டுவரப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு இரண்டு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, சாத்னா மாவட்டத்தில் உள்ள சித்தரகூட் நகருக்குச் சென்ற ராகுல் காந்தி அங்குள்ள கமலநாத் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

இதையடுத்து சாத்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 10 நாட்களில் விவசாயிகளின் அனைத்துக் கடன்களும் ரத்து செய்யப்படும். மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் இந்த நாட்டைச் சீரழித்து விட்டது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில்களைப் பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலமாக முற்றிலும் அழித்துவிட்டார். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி என்பது மக்களுக்கான வரியாக மாற்றியமைக்கப்படும். நாடு முழுவதும் மிகக் குறைந்த அளவிலான ஒரே வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றவர், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைப் பிரதமர் நிறைவேற்ற இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், “ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நடந்த ஊழல் மூலமாக ஊழலற்ற ஆட்சி கொடுப்பதாக மக்களுக்கு அளித்த நம்பிக்கையை மோடி உடைத்துவிட்டார். இந்த ஒப்பந்தத்தில் பிரதமரின் நண்பரான அனில் அம்பானிக்குத்தான் பல நன்மைகள் கிடைத்துள்ளன. நான் பிரதமர் மோடிக்கு ஒரு சவால் விடுக்கிறேன், விமானக் கட்டுமானத்தில் அனுபவம் இல்லாதவரும் ஏற்கெனவே 45,000 கோடி ரூபாய் வங்கி கடன் வைத்திருப்பவரான அனில் அம்பானியிடம் ரஃபேல் ஒப்பந்தத்தை ஒப்படைத்தது ஏன் என்பதை வெளிப்படையாக மோடி மக்கள் முன் கூறமுடியுமா?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon