மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

தாது இறக்குமதிக்குக் கூடுதல் வரி!

தாது இறக்குமதிக்குக் கூடுதல் வரி!

இரும்புத் தாது இறக்குமதிக்கு 30 விழுக்காடு வரி விதிக்க இந்திய கனிமத் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்றும், இறக்குமதிக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டுமென்றும் இந்திய கனிமத் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து இந்திய கனிமத் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின் தெற்கு பிராந்திய இயக்குநர் கியூம் அலி உருக்கு அமைச்சகச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய இரும்பு உருக்குத் துறையைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

இரும்புத் தாதுவுக்கு இறக்குமதி வரி குறைந்தபட்ச அளவாகத் தற்போது 2.5 விழுக்காடு மட்டுமே விதிக்கப்படுகிறது. இதனால் இரும்பு உருக்கு ஆலைகள் மற்ற நாடுகளிலிருந்து அளவுக்கு அதிகமான இரும்புத் தாதுகளை இறக்குமதி செய்கின்றன. இந்தியாவிலேயே இரும்பு தாது அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. கடந்த 15 நாட்களாக இந்தியாவில் தேவைக்கு அதிகமான அளவில் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே இரும்புத் தாது மற்றும் இரும்புத் தாது துகள்களுக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய 30 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon