மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

எல்லை தொல்லைகளை நடுங்க வைக்கும் சர்ஜிகல் தாக்குதல்கள்!

எல்லை தொல்லைகளை நடுங்க வைக்கும் சர்ஜிகல் தாக்குதல்கள்!

பாகிஸ்தான் எல்லையில் மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுகிறது என சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் நாட்டின் ராணுவ தளபதி பிபின் ராவத்.

2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலின் நாயகன் லான்ஸ் நாயக் சந்தீப் சிங், காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் வீர மரணமடைந்தார்

ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து நாட்டின் பாதுகாப்புப் படைகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்திவிட்டனர் என சாடியிருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இப்படி நாட்டின் அரசியலில், பாதுகாப்புத் துறையில் அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகிறது சர்ஜிகல் தாக்குதல் அல்லது சர்ஜிகல் ஸ்டிரைக் அல்லது துல்லிய தாக்குதல்.

நாடு விடுதலை அடைந்தது முதல் பாகிஸ்தான், சீனாவுடன் யுத்தங்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்திய - சீனா எல்லைகளில் எப்போதும் பதற்றம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பதற்றம் திடீரென உச்ச நிலையை எட்டும். பேச்சுவார்த்தைக்குப் பின் பதற்றம் தணியும்.

இதுதான் எல்லைக் கள யதார்த்தமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த சர்ஜிகல் தாக்குதல் பற்றிய பேச்சுகள் அதிகம் அடிபடுகின்றன.

மியான்மருக்குள்...

2015ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் சண்டெல் மாவட்டத்தில் ராணுவத்தின் 6ஆவது டோக்ரா ரெஜிமெண்ட் மீது ‘அகன்ற நாகாலாந்து’ எனும் நாகாலிம் தனிநாடு கோருகிற நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 18 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் அண்மைக்காலத்தில் நடத்திய மிகப் பெரும் தாக்குதல் இது. இதையடுத்து ஜூன் 10ஆம் தேதியன்று நாகா தீவிரவாதிகள் பதுங்கியிருந்த மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் நாகா தீவிரவாதிகள் 158 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் இந்த அதிரடித் தாக்குதல் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ என அழைக்கப்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில்...

இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ தலைமையகத்தின் மீது நான்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். 3 நிமிடங்களில் 17 கிரேனேடுகளைச் சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் இந்த கொடூரத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 17 பேர் வீர மரணம் அடைந்தனர். 30க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். இது நாட்டின் ராணுவத்துக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரும் சவாலாகப் பார்க்கப்பட்டது. நாடே பெரும் அதிர்ச்சியில் உறைந்தது.

இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என உடனடியாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இத்தாக்குதல் குறித்து காஷ்மீரிலும் டெல்லியிலும் பரபர ஆலோசனைகள் அரங்கேறின.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்திய 11 நாட்களுக்குப் பின்னர் அதாவது 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இந்திய ராணுவம் மீண்டும் ஒரு ‘சர்ஜிகல் தாக்குதலை’ நடத்தியது. இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக பயங்கரவாதிகள் முகாமிட்டிருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் 25க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ராணுவத்தின் இந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கும் நாடு முழுவதும் பெரும் பரவசத்தை உருவாக்கியது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் ராணுவத்துக்குப் பாராட்டுகளைக் குவித்தனர்.

மீண்டும் மியான்மர் எல்லையில்...

இதனையடுத்து மீண்டும் மியான்மர் எல்லையில் மற்றொரு சர்ஜிகல் தாக்குதலை ராணுவம் மேற்கொண்டது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் 27ஆம் தேதி அதிகாலை 4.45 மணி அளவில் இந்தியா - மியான்மர் எல்லையில் உள்ள லங்கு கிராமத்தில் இருந்து ராணுவத்தின் பாரா கமாண்டோக்கள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இதில் நாகா தீவிரவாதிகளுக்குப் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் பாக். எல்லையில்...

தற்போது மீண்டும் பாகிஸ்தான் எல்லையில் இன்னொரு சர்ஜிகல் தாக்குதலை ராணுவம் நடத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டு இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எந்தெந்த இடங்களில் தீவிரவாதிகள் முகாம்களை அழித்ததோ, அதே பகுதிகளில் அந்த முகாம்கள் மீண்டும் முளைத்திருந்தன. தற்போது மீண்டும் இந்த முகாம்களை இலக்கு வைத்து சர்ஜிகல் தாக்குதலை நடத்தியிருக்கிறது ராணுவம். இந்தப் பகுதியில்தான் 250க்கும் அதிகமான தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த காத்திருந்தனர் என்கிறது ராணுவம்.

அரசியலில் சர்ஜிகல் ஸ்டிரைக்

இப்படி ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் முறை மெல்ல அரசியல் பக்கமும் எட்டிப் பார்க்கிறது. ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியும் அனில் அம்பானியும் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை மீது சர்ஜிகல் தாக்குதலை நடத்தியுள்ளனர் எனச் சாடியிருந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- மா.ச. மதிவாணன்

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon