தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகளை உயிரோடு சமாதி கட்டி வைத்திருக்கும் நிலையில், வீட்டில் கழிவறை இல்லை என்ற ஒரே காரணத்தால் ஓர் இளைஞருக்கும் சமாதி கட்ட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த இந்த கொடுமையை தனது ட்விட்டர் மூலம் அகில இந்திய அளவுக்குக் கொண்டு சென்று, ‘மத்திய அரசின் கழிப்பறை கட்டும் திட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பது வேதனையளிக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவடத்தில் ஓமலூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் வசிப்பவர் சிவாஜி. கூலித்தொழிலாளியான இவரின் மூன்றாவது மகன் செல்லதுரைக்கு கடந்த 24 ஆம் தேதி காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள கணவன் வீட்டுக்குச் சென்றுள்ளார் மனைவி.
அங்கே கழிவறை இல்லாததால் அதிர்ந்து போன காதல் மனைவி, கழிவறை இல்லாத வீட்டில் ஒருநிமிடம் கூட இருக்க முடியாது என்று சொல்லி தாய் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். திருமணமாகி வந்த உடனேயே மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதால் கணவர் செல்லதுரை நேற்று முன் தினம் விவசாயத் தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
சூரமங்கலம் போலீஸார் இதுபற்றி விசாரித்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை இன்று (செப்ட்ம்பர் 28) காலை தனது ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
“இன்று அதிகாலை டெல்லிக்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில், வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தால் புது மனைவி கோபித்துக் கொண்டு செல்ல கணவன் தற்கொலை செய்துகொண்டார் என்ற சோகச் செய்தி துன்பத்தை அதிகப்படுத்துகிறது. பிரதமரின் பிரத்யேக திட்டமான, ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவறை கட்ட நிதி உதவி செய்கிற திட்டம் தமிழகத்தின் கிராமங்களைச் சென்று சேராதது என்பது மேலும் சோகத்தை ஏற்படுத்துகிறது” என்று இந்த சம்பவத்தை கூர்மையான அரசியல் ஆக்கியுள்ளார்.
மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்ட ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்பதையே இவ்வாறு சுட்டிக் காட்டியிருக்கிறார் தமிழிசை. அதிலும் ஓமலூர் என்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்துக்கு உட்பட்டது என்பது இங்கே அழுத்திச் சொல்லப்பட வேண்டிய தகவல்.