மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 30 அக் 2020

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினம்: மோடி மரியாதை!

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினம்: மோடி மரியாதை!

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதன் 2ஆம் ஆண்டு தினத்தையொட்டி கோனார்க்கில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவத்தினர் வான்வழியாகத் தரையிறங்கினர். எல்லையில் இருந்து 500 மீட்டர் முதல் 3 கி.மீ. தொலைவு வரை முன்னேறிய இந்திய வீரர்கள், பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல், லிபா உள்ளிட்ட 7 பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு தீவிரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதன் 2ஆம் ஆண்டு தினத்தை நாளை (செப்டம்பர் 29) சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் கோனார்க்கிற்கு இன்று (செப்டம்பர் 28) சென்ற பிரதமர் மோடி அங்குள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் இந்திய ராணுவத்தின் பெருமைகளைப் போற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர். தளபதிகள் மாநாடு மூன்றாவது முறையாக டெல்லிக்கு வெளியே நடைபெறவுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு விக்ரமாதித்யா போர்க் கப்பலிலும் 2017ஆம் ஆண்டு டெஹராடூனிலும் இந்த மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon