மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: துணிவும் நம்பிக்கையும் இணைந்த அடையாளம்!

சிறப்புக் கட்டுரை: துணிவும் நம்பிக்கையும் இணைந்த அடையாளம்!வெற்றிநடை போடும் தமிழகம்

கே.அன்பழகன்

எனது நண்பரும் தலைவருமான கலைஞரின் பங்களிப்புகள் குறித்த கொண்டாட்டங்களில், எண்ணற்ற பொதுக்கூட்டங்களில் தலைமை தாங்கும் உரிமையைப் பெற்றேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த திராவிட இயக்க விழாவில் தொடக்கவுரையை நிகழ்த்தினேன். இந்த உரைகள் சம்பிரதாயமானவை அல்ல. அவை எங்களது கொள்கைகளின் உயரங்களையும், வரையறுக்கப்பட்ட சித்தாந்தங்களையும் வெளிப்படுத்துபவை.

கலைஞரின் நீண்ட பயணத்தின் சாட்சியாக, பங்கேற்பாளனாக, சக பயணியாக இருந்திருக்கிறேன். தமிழ் மொழியின் பெருமைக்கான இடத்தை உருவாக்குவதிலும், சமத்துவமின்மையை நீக்கிச் சமூக நீதியை நிலைநிறுத்தவும், இந்திய அரசியலை உண்மையான கூட்டாட்சியாக உருவாக்கவும், ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட உள்விவகாரங்களில் மாற்றித் தர இயலாத உரிமை அமையவும், எங்களது போராட்டப் பயணம் உண்டானது.

நாம் ஏன் கலைஞரைக் கொண்டாட வேண்டும்? அவர் எங்களது கட்சித் தலைவர் என்பதாலா? ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர் என்பதற்காகவா? பலமுறை நமது பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர் என்பதற்காகவா? இளம் வாசகர்களின் கவனத்தைக் கவரும் வகையில், முக்கிய விஷயமொன்றைக் கூற விரும்புகிறேன். கலைஞரைப் பற்றிய எந்தக் கொண்டாட்டமும், அவரைப் பற்றி மட்டுமேயானதாக இராது. அதேபோல, தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் மட்டும் நினைவூட்டுவதாகவும் ஆகாது. அது நம்மைப் பற்றியது. மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தையும் பற்றியது. நமது திராவிட இனம் பற்றியது.

பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை உள்வாங்கிக்கொள்வதே, கலைஞரைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழி. இந்த அடிப்படை அம்சத்தில் நாம் தோல்வியுற்றால், கலைஞரைப் பாராட்டுவதில் அர்த்தமே இல்லை. கலைஞர் மிகப் பெரிய தலைவர். இயல்பிலேயே திறமை வாய்க்கப்பெற்ற எழுத்தாளர், பிரமாதமான பேச்சாளர், திறமையான ஆட்சியாளர், தனது கொள்கைகளுக்காக எவ்வித தியாகங்களுக்கும் தயாராக வாழ்ந்த மனிதர். நமது கண்ணியத்தையும் சுயமரியாதையையும் காப்பதற்கான அவரது பற்றுறுதி தன்னிகரில்லாதது. இதுபோன்ற ஒருவரை நினைவுகூர்வதற்கும், கொண்டாடுவதற்கும், அவர் எந்த விழுமியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவை நிலைபெறுவதற்காகக் கடுமையாக உழைத்தாரோ அந்த விழுமியங்களை நாம் கைக்கொள்ள வேண்டும்.

70 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய இளைஞர்கள் உயர்ந்த கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களால் பிரிந்திருந்தனர். சிலர் காங்கிரஸ் கட்சியோடு பிணைந்திருந்தனர்; சிலர் கம்யூனிஸ்ட் கட்சியையும், சமத்துவ இயக்கங்களையும், தமிழ் உரிமை மற்றும் சுயமரியாதை இயக்கங்களையும் சார்ந்திருந்தனர். இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு விவாதங்கள் எழுந்தன. அப்போது இந்த இயக்கத்துக்கு (திமுக) நிறைய இளைஞர்கள் வந்ததற்கு, அண்ணாவின் தாக்கமே காரணம். மொழி உரிமை, மாநில உரிமை, பிறப்பினால் எந்த மனிதரும் இன்னொருவருக்கு அடிமை இல்லை என்னும் சிந்தனை, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குதல் ஆகிய அண்ணாவின் முற்போக்கான எண்ணங்கள் இதற்குப் பின்னிருந்தன.

இன்று, பல கட்சிகள் தங்களது கட்சிப் பெயருக்கு முன்னால் திராவிடத்தை ஒட்டிக்கொண்டுள்ளன. அவை எல்லாம் திராவிடக் கட்சிகள் ஆக முடியாது. அவர்களது கொள்கைகளையும் செயல்பாடுகளையும் உணர்ச்சிவசப்படாமல் ஆய்வு செய்தோமேயானால், கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாவோம். இப்படி ஆய்வுசெய்தால், பெரியார், அண்ணாவின் உணர்வுகளை உண்மையாகவே உள்வாங்கிக் கொண்டிருக்கும் கட்சி திமுக என்பதையும் உணர்ந்துகொள்வோம். கலைஞரின் திறன்மிகு தலைமையினால் மட்டுமே, இந்த இயக்கம் தடம்புரளாமல் தொடர்ந்து வருவதையும் புரிந்துகொள்வோம்.

கலைஞரின் கூர்மதி, ஓய்வில்லாத கழகப் பணி, அசாதாரணமான நிர்வாகத் திறமை போன்றவற்றினால் தலைமைப் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. இந்தத் திறமைகளை அவர் பரம்பரைச் சொத்தாகப் பெறவில்லை. கலை, இலக்கிய உலகில் செய்த ஈடு இணையற்ற சாதனைகளால் அவரது எழுச்சி உருவாகவில்லை. அவர், தான் பணியாற்றிய ஒவ்வொரு துறையிலும் தலைமைப் பொறுப்புக்கான தகுதிகளை வெளிப்படுத்தினார். அவரது பலதரப்பட்ட செயல்பாடுகளின் அடிநாதமாக, சுயமரியாதை சார்ந்த அரசியல் கொள்கைகள் இருந்தன. அதனால்தான் அவர் எங்களது தலைவராக இருந்துவருகிறார்.

முதலமைச்சராக, கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எழுத்தாளராக, மேடைப் பேச்சாளராக, அவர் செய்த கணக்கிலடங்காச் சாதனைகளை என்னால் வரிசைப்படுத்த முடியும். அவரது இந்தச் செயல்பாடுகள் அனைத்துமே, சுயமரியாதைக் கொள்கைகளை வலுப்படுத்துவதையும், அதனை ஒட்டுமொத்தமாகப் பரப்பும் ஆசையையும் ஒன்றாகப் பிணைக்கின்றன. இதற்காகத்தான் திமுகவையும் கலைஞரின் தலைமைத்துவத்தையும் மக்கள் உற்று நோக்குகின்றனர். நமது அரசியல் சூழலில் இதனாலேயே மற்றவர்களைவிட அவர் உயர்ந்து நிற்கிறார். உங்களுக்கென்று அரசியல் விதிமுறை இருக்கும்போது, தெளிவான கொள்கைகள் இருக்கும்போது, அதுவே வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகக் கருதி எதிர்கொள்ளும் வல்லமையைத் தரும்.

இந்தக் கொள்கைகள் மீதான எனது பற்றுறுதியில்தான், கலைஞருடனான என் உறவு உருவாகிறது. இந்தப் பற்றுறுதிதான் எங்களது நட்பை வலுப்படுத்தியது, அவரிடம் விவாதிக்கவும் கேள்வி கேட்பதற்குமான உரிமையைத் தந்தது. இதன் பலனாக, கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது. இந்தக் கொள்கைகள்தான், கலைஞருடன் இருந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் எனக்குத் தந்துள்ளது. அவரே, எனது கொள்கைகளின் சிறந்த காவலனாகவும் இருந்திருக்கிறார்.

எப்போது கலைஞரைப் பார்த்தாலும், நான் வளமான, வெற்றிகரமான தமிழ்நாட்டையே அவரிடத்தில் பார்த்தேன். நான் அவரது வயதைப் பார்த்ததில்லை. அவரது எழுத்துகளைத் தனியாகப் பார்த்ததில்லை. அவர் முதலமைச்சராக இருப்பதை பிரமிப்புடன் பார்த்ததில்லை. நான், என்னுடைய உயிரோட்டமுள்ள கொள்கைகளையே அவரிடத்தில் பார்த்தேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பார்த்தேன். அதன் ஒட்டுமொத்த நலன்களுக்காகக் கலைஞருடன் இணைந்து நிற்கப் பல ஆண்டுகளுக்கு முன்னால் உறுதிகொண்டேன். இணைந்து பணியாற்றினேன்.

தலைமைக்கான தகுதிகளில், அவரை விஞ்சி எந்தத் தலைவரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர், துணிச்சலின், நம்பிக்கையின் சின்னம். அசைக்க முடியாத அவரது கொள்கைகளுக்கு ஊறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, சமத்துவமான தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவது என்னும் அவரது கொள்கைக்கு எந்த ஊறும் ஏற்பட்டுதிருப்பதை உறுதிசெய்வது மட்டுமே அவருக்கான நமது அஞ்சலியாக இருக்க முடியும்!

கே.அன்பழகன், திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்

(பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனிடம் கூறியது)

நன்றி: ப்ரண்ட்லைன்

தமிழில்: உதய் பாடகலிங்கம்

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon