மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 30 அக் 2020

நிவாரண நிதி வழங்காத போலீசார் இடமாற்றம்!

நிவாரண நிதி வழங்காத போலீசார் இடமாற்றம்!

கேரளாவில் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்க மறுத்த 9 ஆயுதப்படைக் காவலர்கள் உட்பட 14 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையினால் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை புனரமைக்க, நிதி அதிகளவில் தேவைப்பட்டது. பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர். வெள்ள நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் உட்பட அனைவரும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை வழங்க முன்வர வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சம்பளத்தை வழங்க விருப்பமில்லாத அரசு ஊழியர்கள் அதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களது ஊதியத்தை வழங்கினார். ஒரு சிலர் ஒரு மாத ஊதியத்தை அளிக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், திருவனந்தபுரம் ஆயுதப்படை முகாமில் பணிபுரியும் 700 காவலர்களில் 300 பேர் சம்பளத்தை வழங்க விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தனர். இவர்களில் 9 பேர் நேற்று (செப்டம்பர் 27) அதிரடியாக மலப்புரம் ஆயுதப்படை முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

இதேபோல தங்களது சம்பளத்தை அளிக்க மறுத்த மேலும் 5 போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சம்பளத்தை வழங்க மறுத்ததால் தான் இவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களைத் திடீரென இடமாற்றம் செய்த திருவனந்தபுரம் ஆயுதப்படை டிஐஜியின் நடவடிக்கைக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு மாதச் சம்பளத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கொள்ளையடிப்பதற்குச் சமமாகும் என்று கூறி கேரள அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon