மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

‘பரியேறும் பெருமாள்’: திரைத்துறையினர் பார்வை!

‘பரியேறும் பெருமாள்’: திரைத்துறையினர் பார்வை!வெற்றிநடை போடும் தமிழகம்

அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த்த திரைத்துறையினர் பலரும் பாராட்டிவருகின்றனர்.

படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி நடிகர் கதிருக்குத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த், “பரியேறும் பெருமாள் படம் தமிழ் சினிமாவின் சுடர்விடும் புதிய பயணத்தைத் தொடக்கி வைத்திருக்கிறது. மாரி செல்வராஜின் இயக்கம் சிறப்பு. நிஜத்திலிருந்து தழுவப்பட்ட அரிதான திரைப்படம். இந்தப் படம் என்னை ஆழமாகப் பாதித்தது. படம் முடிந்த பின்னரும் பல மணி நேரம் என்னுடன் பயணித்தது. கதிரின் நடிப்பு உணர்ச்சிபூர்வமானது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

படத்தைப் பார்த்துவிட்டுச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இயக்குநர் ராம், “அரசியல் ரீதியாக, உணர்வுபூர்வமான படம் . திருநெல்வேலியை மிக அழகாக இயக்குநர் பதிவு செய்துள்ளார். கடந்த 10 வருடங்களில் சிறந்த படம் என உறுதியாகச் சொல்ல முடியும்” என்று கூறினார்.

நடிகர் யோகிபாபு

தரமான படத்தில் நடித்தது மகிழ்ச்சி. ஆண்டவன் கட்டளை படத்திற்குப் பிறகு இது போன்ற கதையில் நடித்தது மகிழ்ச்சி. கமெர்ஷியல் படத்தைத் தாண்டி இது போன்ற படத்தில் நடித்தது மகிழ்ச்சி. குணசித்திரக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆவலாக உள்ளேன்.

இயக்குநர் நவீன்

வாழ்வியலை அழகாகப் படம்பிடித்துக் காண்பித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். அடித்தட்டு மக்களின் தேவைகளைப் பேசும் படமாக அமைந்துள்ளது.

இயக்குநர் லெனின் பாரதி

தரமான படைப்பு. சாதிய வக்கிரங்களை விலக்கி வேறு தளத்தில் பயணிக்கும் வகையில் எடுக்க உதவும்.

இயக்குநர் விக்னேஷ் சிவன்

தரமான படத்தை மக்கள் திரையில் பார்த்தால் மட்டும்தான் படம் வெற்றி பெறும். சமூகத்திற்குத் தேவையான படம். வலியை ஏற்படுத்தும். ஆனால் எதையும் திணிக்காமல் எதார்த்தத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி

எழுத்தாளராக இயக்குநர் சாதித்துள்ளார். சில படங்கள் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். ‘கருப்பி’ பாடல் ஆத்மார்த்தமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon