அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருக்கிற கிராம சபை கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி தாராபுரத்தில் பேசிய கமல்ஹாசன் தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சபை உள்ளது. கிராம சபை குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் இன்று (செப்டம்பர் 28) கட்சி அலுவலக நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன், “மாநில சுயாட்சி கேட்டு சரித்திரத்தில் இடம்பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அதன் நீட்சியாக நான் கிராம சபை ஆட்சியைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அது நகர சபை ஆட்சியாகவும் மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல கிட்டத்தட்ட நூறு வருடம் பழமையானது. அதை இன்னும் செயல்படுத்தாமல் இருப்பதுதான் பெரிய அவலம். இதை அரசு செயல்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விதித்தார். சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அவர் வரவேற்றார்.