மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

ஆஸ்திரேலியரின் மிரட்டலான இரட்டை சதம்!

ஆஸ்திரேலியரின் மிரட்டலான இரட்டை சதம்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் தொடரில் டி ஆர்சி ஷார்ட் இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய உள்ளூர் அணிகள் மோதும் ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் நேற்றைய (செப்டம்பர் 27) போட்டியில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவரும், பிக் பேஷ் டி-20 தொடரின் தொடக்க வீரருமான டி ஆர்சி ஷார்ட் மூன்றாவது வீரராகக் களமிறங்கினார்.

முதல் 80 ரன்கள் வரை நிதானமாக ஆடி வந்த அவர், திடீரென அதிரடி சூறாவளியாக மாறி பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார். 83 பந்துகளில் சதம் கடந்து, பின் 128 பந்துகளில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை அடித்து இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். இதில் கடைசி 50 ரன்கள் வெறும் 22 பந்துகளில் அடிக்கப்பட்டவை. 148 பந்துகளில் 257 ரன்கள் எடுத்துத் தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த ஷார்ட், ஜிம்மி பியர்சனின் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

இவரது இந்த இன்னிங்ஸில் 15 பவுண்டரிகளும், 23 சிக்ஸர்களும் அடங்கும். இவரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் 30 ரன்களைக் கூடத் தொடவில்லை. இறுதியில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 387 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய குயின்ஸ்லாந்து அணி 42.3 ஓவர்களில் 271 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாகப் பந்துவீசிய ஆண்ட்ரூ டை 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon