விசாரணை ஆணையத்தின் செயலாளர் கோமளாவை மாற்ற வேண்டுமென, சசிகலா தரப்பிலிருந்து ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், ஆணையத்தில் சசிகலா உறவினர்கள், மருத்துவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். தற்போது சசிகலா தரப்பின் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்ட 15 பேரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
மருத்துவர் செந்தில்குமார் அளித்த வாக்குமூலத்தில், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சோர்வாக இருந்தார். அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் கண்விழித்த ஜெயலலிதா, தனது உடல்நிலை குறித்து மக்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அச்சப்படும் விதத்தில் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆணையத்தின் செயலாளராக உள்ள கோமளாவை மாற்ற வேண்டும் என்று சசிகலா தரப்பிலிருந்து ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில், “ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரின் மனைவியான கோமளா, ஆணையத்தின் தகவல்களை பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வழங்குகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆணையத்தின் செயலாளராக பன்னீர்செல்வம் என்பவர் செயல்பட்டு வந்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, புதிய செயலாளராக கடந்த பிப்ரவரி மாதம் கோமளா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த தினகரன், “கோமளாவின் கணவர் பாபு பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞர். மேலும் மனோஜ் பாண்டியன் அதிமுகவில் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்குப் பேனரெல்லாம் வைத்தவர். எனவே, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்தான் ஆணையத்தில் உள்ளார். இப்படியிருந்தால் விசாரணை ஆணையம் எப்படி நியாயமாகச் செயல்பட முடியும்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.