மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவு!

தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவு!

ஹெச்.ராஜாவின் விளக்கத்தைக் கேட்காமலேயே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் வரும் 8ஆம் தேதி விளக்கமளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தேசியச் செயலாளர் ஹெச் ராஜா நீதிமன்றம் குறித்து தரக்குறைவாக பேசியது தொடர்பாக நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. ஆனால் தாமாக வழக்கு தொடர நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வுக்கு அதிகாரம் இல்லை என ஹெச்.ராஜா தரப்பில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணியிடம் முறையிடப்பட்டது. மேலும், இது தொடர்பாக, தலைமை நீதிபதி அமர்வுதான் தாமாக முன்வந்து வழக்கு தொடர முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்தைத் தரக்குறைவாக பேசியது தொடர்பாக ஹெச்.ராஜாவைத் தண்டிக்க கோரி, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ஹெச்.ராஜாவின் விளக்கத்தைக் கேட்காமலேயே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக் கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் அக்டோபர் 3ஆம் தேதியன்று ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 28) நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விசாரணை நடத்த அதிகாரம் இல்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதி இதுதொடர்பாக வரும் 8ஆம் தேதி அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon