மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

ஸ்டாலினை அழைக்கும் தம்பிதுரை

ஸ்டாலினை அழைக்கும் தம்பிதுரை

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன் விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவப் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவுக்கான அழைப்பிதழில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் பெயரும், சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் தினகரன் பெயரும் இடம் பெற்றிருந்தது. பெயர் இடம்பெற்றிருந்தால் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் அவசியமில்லை என்று தினகரன் தெரிவித்துவிட்டார். ஸ்டாலின் பங்கேற்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் இன்று (செப்டம்பர் 28) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “திமுக வளர்ச்சிக்கு அண்ணாவின் தலைமையில் பாடுபட்டவர் எம்.ஜி.ஆர். பிறகு கலைஞரை முதல்வராக்குவதற்கும் பணியாற்றிய தன்னலமற்ற தலைவர் அவர். திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அவரின் நூற்றாண்டு விழாவை திமுக புறக்கணிப்பது வருத்தத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் ஸ்டாலின், விழாவில் கலந்து கொள்ள வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்” என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சியை பிடித்திருக்கும் என்றும் கூறினார்.

“திமுக-காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து அண்மையில்தான் நாங்கள் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினோம். அப்படியிருக்க நாங்கள் எப்படி காங்கிரஸுடன் கூட்டணி அமைப்போம்.அந்த கேள்விக்கே இடமில்லை. நாங்கள் தனித்து நின்று 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்” என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் தம்பிதுரை.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon