மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

சிலைகள் பறிமுதல்: உரிமம் உள்ளதாகத் தகவல்!

சிலைகள் பறிமுதல்: உரிமம் உள்ளதாகத் தகவல்!

சிலைக்கடத்தல் விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இரண்டாவது நாளாகச் சோதனை நடைபெற்று வருகிறது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைப்பற்றிய அனைத்துச் சிலைகளும் உரிமம் பெற்றவை என்று அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ரன்வீர் ஷா. ஆடை ஏற்றுமதி நிறுவனமொன்றை நடத்தி வரும் இவர், சிலைகள் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 6 துணை ஆய்வாளர்கள் மற்றும் 35 போலீசார் ஆகியோர் நீதிமன்ற உத்தரவுடன் இவரது வீட்டில் நேற்று (செப்டம்பர் 27) காலையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 12 வெண்கலச் சிலைகள், 22 கலைநயமிக்க கல் தூண்கள் மற்றும் 55 சிலைகள் என 89 பழங்காலக் கலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் கிரேன் உதவியுடன் 4 லாரிகளில் ஏற்றப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தச் சிலைகளில் பலவற்றை, தீனதயாளனிடம் இருந்து ரன்வீர் ஷா வாங்கியதாகக் கூறியுள்ளார் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல்.

இரண்டாவது நாளாக இன்றும் (செப்டம்பர் 28) ரன்வீர் ஷா வீட்டில் சோதனை தொடர்கிறது. இந்த சோதனை குறித்துப் பேசிய ரன்வீர் ஷாவின் வழக்கறிஞர் கே.தங்கராசு, சிலைகளை வாங்கியது சட்டவிரோதமான விஷயமல்ல என்று தெரிவித்தார். “சிலைகள் வாங்கியதற்கான முறையான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. நீதிமன்றத்தின் மூலமாக, சிலைகளைத் திரும்பப் பெறுவோம். சிலைகளை விற்பதற்கான உரிமம் உள்ளவர்களிடம் இருந்தே, அனைத்துச் சிலைகளும் முறையாக வாங்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

தனது வீட்டில் இருந்து சிலை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, ரன்வீர் ஷா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிலைகளை உரிய முகவர்களிடம் இருந்து சட்டப்பூர்வமாக வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

“என் வீட்டை அலங்கரிக்கவும், வழிபாட்டிற்காகவும், வாஸ்து சாஸ்திர முறைகளைப் பின்பற்றவும், கலைநயத்திற்காகவும், நான் விலைக்கு வாங்கி வைத்திருந்த, சந்தையில் தாராளமாகக் கிடைக்கக்கூடிய கருங்கற்களால் ஆன சிலைகளைக் காவல் துறைக் கண்காணிப்பாளர் சிலைத் தடுப்புப் பிரிவு பொன்.மாணிக்கவேல் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேற்படி, சிலைகளைச் சட்ட முறையாக வாங்கியதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில், அவைகளை முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்ப்பித்து மேற்படி சிலைகளைத் திரும்பப் பெற உரிய நீதிமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனை செய்து வருகிறேன்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon