மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

கிச்சன் கீர்த்தனா - பிரண்டைத் துவையல்!

கிச்சன் கீர்த்தனா - பிரண்டைத் துவையல்!

மன அழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் பிரண்டைத் துவையலைச் சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். வாரம் இருமுறை பிரண்டையைச் சாப்பிட்டுவந்தால் உடல் வலுப்பெறும். இப்படிப்பட்ட மருத்துவக் குணம் கொண்ட பிரண்டையை எப்படித் துவையல் செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்

வதக்க

பிரண்டை - ஒரு பிடி

பெரிய வெங்காயம் – பாதி அளவு அல்லது சின்ன வெங்காயம் - 5

காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3 (காரத்திற்கேற்ப)

தனியா - அரை டீஸ்பூன்

பூண்டு - 3 அல்லது 4 பற்கள்

புளி – எலுமிச்சை அளவு

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் – சிறிதளவு

தாளிக்க

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் - தாளிக்க

செய்முறை

முதலில் பிரண்டையை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதன் பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், தனியா, பிரண்டை துண்டுகள் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பிரண்டைத் துண்டுகள் நன்கு வதங்க வேண்டும். இல்லையெனில்,சாப்பிடும்போது நாக்கு அரிக்கும். வதங்கியதும், ஆறவைத்து சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

பின்னர், ஒரு வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும். சுவையான பிரண்டை துவையல் தயார்.

இந்தத் துவையலை வெறும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

பயன்கள்

பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால் எலும்புகள் உறுதியாக வளரும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு, கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபடப் பிரண்டைத் துவையல் உதவும்.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். ஞாபகசக்தியைப் பெருக்கும். மூளை நரம்புகளைப் பலப்படுத்தும். எலும்புகளுக்குச் சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon