மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

ரஃபேல் இன்று: குழப்பும் பவார்!

ரஃபேல் இன்று: குழப்பும் பவார்!

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார். அதனை மறுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக மராத்தியத் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு நேற்று (செப்டம்பர் 27) பேட்டியளித்த சரத் பவார், “ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டு மக்களுக்கு சந்தேகம் எழவில்லை. இந்த ஒப்பந்தம் தொடர்பான, தொழில்நுட்ப ரீதியான தகவல்களை வெளியிடக் கோருவதும் சரியல்ல. ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விளக்கத்தைக் காட்டிலும், நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய அரசு தரப்பிலான வாதத்தை சரியாக முன்வைக்க கூடியவர்.” என்றார்.

சரத் பவாரின் கருத்தை ஆதரிக்கும் விதமாக பேசிய பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா, ’ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசைக் குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் கருத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்நிலையில், சரத் பவாரின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் நேற்று (செப்டம்பர் 27 ) செய்தியாளர்களிடம் பேசுகையில், “சரத் பவார் கூறிய கருத்து தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறாகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. அவர் மோடியை ஆதரிக்கவில்லை. ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்றும் குறிப்பிடவில்லை. ‘ரஃபேல் விவகாரம் மூடி மறைக்கப்படுகிறது. மக்கள் திசைதிருப்பப்படுகின்றனர். அதனால் குழப்பம் ஏற்படுகிறது’ என்றுதான் அவர் கூறினார். 1980ஆம் ஆண்டு போர்ஃப்ஸ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பாஜக வலியுறுத்தியதைப் போல, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்திலும் விசாரணை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon