மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன்!

கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன்!

முதல்வரை அவதூறாக விமர்சித்த வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வரையும் காவல் துறையையும் அவதூறாக விமர்சித்திருந்த, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கோரி கருணாஸ் மனுதாக்கல் செய்திருந்தார். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை தரப்பிலிருந்தும் மனு அளிக்கப்பட்டது. காவல் துறையின் மனுவைத் தள்ளுபடி செய்த எழும்பூர் நீதிமன்றம், கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது. நேற்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது, ரசிகர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளின் கீழ் வேலூர் சிறையில் வைத்து கருணாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் நேற்று கருணாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது பதியப்பட்ட இரு வழக்குகளில், ஒரு வழக்கில் மட்டும் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த கருணாஸின் ஜாமீன் மனுவின் மீதான தீர்ப்பு இன்று (செப்டம்பர் 28) வழங்கப்பட்டது. அப்போது, கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை பெருநகர 14வது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டார். ஆனாலும் ஐபிஎல் வழக்கில் அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருப்பதால், அதில் ஜாமீன் பெற்றால் மட்டுமே கருணாஸ் சிறையிலிருந்து வெளிவர முடியும். இவ்வழக்கிலும் கருணாஸுக்கு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon