மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

முரசு கொட்டிய முதல் நாள் வசூல்!

 முரசு கொட்டிய முதல் நாள் வசூல்!

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், ஜெயசுதா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம், செக்கச்சிவந்த வானம். வரதனாக அரவிந்த் சாமி, தியாகுவாக அருண் விஜய், எத்தியாக சிம்பு என மூவரும் இந்தப் படத்தில் அண்ணன், தம்பியாக நடித்திருக்கிறார்கள். ரசூல் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் நேற்று (செப்டம்பர் 27) உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது.

கடந்த வாரம் வெளியான சாமி ஸ்கொயர், அந்த திரையரங்குகளில் அப்படியே தொடர்கிறது. சீமராஜா ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகள் செக்கச்சிவந்த வானம் படத்திற்காக ஒதுக்கப்பட்டன. முதல் நாள் படம் பார்க்க முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் சென்னை நகரில் படம் திரையிடப்படும் அனைத்துத் திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

ரஜினி படங்களுக்கு மட்டுமே இருந்த இந்த வேகம் செக்கச்சிவந்த வானத்திற்குக் கிடைத்திருக்கிறது. அதிகாலை 5 மணி காட்சி திரையிடப்பட்ட படங்களின் வரிசையில் செக்கச்சிவந்த வானம் இடம் பிடித்துள்ளது.

நகர்ப்புறங்களில் இப்படத்திற்குக் கிடைத்த ஆரவாரமான, ஆர்ப்பாட்டமான ஓப்பனிங் , இரண்டாம் கட்ட நகரம், புறநகர்ப் பகுதிகளில் கிடைக்கவில்லை. தமிழகம் முழுவதும் செக்கச்சிவந்த வானம் படத்திற்கு முதல் நாள் பத்து கோடியே இருபத்தியொரு லட்சம் வசூல் ஆகியுள்ளது.

இது சீமராஜா முதல் நாள் வசூலைக் காட்டிலும் குறைவு, சாமி ஸ்கொயர் படத்தின் முதல் நாள் வசூலைக் காட்டிலும் அதிகம்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon