மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு!

ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்பட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பேரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 26) கோவை பேரூரில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக அரசு பதவி விலகக்கோரி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமச்சந்தின் மற்றும் திமுக நிர்வாகிகள் சேனாதிபதி, முத்துசாமி மற்றும் பேச்சாளர்கள் சூர்யா வெற்றிகொண்டான், அதிரடி அல்தாஃப் ஆகிய 7 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் பேரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப் படுத்தி பேசுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கி நிதி உதவியோடு நெடுஞ்சாலைத் துறையில் நடக்கும் திட்டப் பணிகளை முதல்வரின் உறவினர்களுக்கே கொடுப்பதாக ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தில் இருக்கிறது. இதில் முதல்வருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுபோல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குத் தொடுத்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி. இது தவிர பல அமைச்சர்கள் மீதான புகார்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிப்பது, அதன் பின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது என்று தீவிரமாக இருக்கிறார் ஆர்.எஸ். பாரதி. இந்த நிலையில்தான் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் காழ்ப்புணர்வோடு தொடுக்கப்பட்ட வழக்கு என்கிறார்கள் திமுக தரப்பில்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon