மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 30 மே 2020

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி!

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி!

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சபரிமலை கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கக் கோரி, 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ஏன் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் நுழையக் கூடாது? இந்து மதத்தில் தடை ஏதும் உள்ளதா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சபரிமலை தேவசம் போர்டு தரப்பில் சபரிமலை கோயிலின் ஆகம விதிகளின்படியே மாதவிலக்குப் பருவத்தில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில், நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கேரள அரசு தெரிவித்தது.

வரலாற்றுத் தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கினர். நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, சந்திரசூட், ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் தனித்தனியாகத் தீர்ப்பை வழங்கினர். 10 வயது முதல் 50 வயது வரையிலான அனைத்துப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது, தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 நீதிபதிகள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தார்.

நீதிபதி தீபக் மிஸ்ரா

“சபரிமலை விவகாரத்தில் நீண்டகாலமாகப் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டுவருகிறது. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள். மத உணர்வுகளுக்காக உண்மையை மறைக்க முடியாது. உடல்ரீதியான பாகுபாடுகளை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப் பிரிவு 25இன்படி பாலினம் அல்லது உடல் ரீதியான விவகாரம் கோயிலுக்குள் செல்ல ஒரு தடையில்லை. சபரிமலை கோயில் பக்தர்கள் மட்டும் தனி மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை விதிப்பது சட்ட விரோதம். பெண்களைத் தெய்வங்களாகப் பார்க்கின்ற நம் நாட்டில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டக் கூடாது. அவர்கள் பலவீனமானவர்கள் கிடையாது” என தெரிவித்தார்.

நீதிபதி நாரிமன்

நீதிபதி கன்வில்கருடன் இணைந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் தெரிவித்தனர்.

மனிதரின் தனித்துவத்தை அழிக்கக்கூடிய எதுவுமே அரசியலமைப்பின்படி தற்காலத்துக்கு ஒவ்வாது என நாரிமன் கூறினார். பெண்களைக் கீழானவர்களாக மதிப்பிடுவது அரசியலமைப்பு தன்னைத்தானே குறைவாக மதிப்பிடுவது போன்றது என்று அவர் தெரிவித்தார்.

நீதிபதி சந்திரசூட்

மற்ற மூன்று நீதிபதிகளின் தீர்ப்போடு இசைவதாகக் கூறினார் நீதிபதி சந்திரசூட். “சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னால், பெண்களின் வருகை பிரம்மச்சரியத்தைத் தொந்தரவு செய்யும் என்ற யோசனை இருந்தது. இது ஆண்களின் பிரம்மச்சரியச் சுமையைப் பெண்கள் மீது சுமத்தியது” என்று கூறினார்.

நீதிபதி இந்து மல்ஹோத்ரா

“மதரீதியான பழக்கவழக்கங்களைப் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. வழிபாடு நடத்துபவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஒரு மதத்தில் எதிர்ப்பு இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட வேண்டும். மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்சினைகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சம உரிமை என்பதுடன் மதரீதியான பழக்கங்களை தொடர்புபடுத்தக் கூடாது.

சபரிமலை சன்னதி மற்றும் தெய்வத்துக்கு இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26 பிரிவின் கீழ் பாதுகாப்பு உள்ளது. மத விஷயங்களில் பகுத்தறிவுக் கருத்தைப் பார்க்கக் கூடாது. இந்தியா பலவிதமான நடைமுறைகளையும், அரசியலமைப்பு அறநெறிப் பன்முகத்தன்மையையும் கொண்டிருக்கிறது. பகுத்தறிவற்ற பழக்கவழக்கத்தை நடைமுறைப்படுத்த அல்லது பின்பற்றச் சமுதாயம் சுதந்திரம் அளிக்க வேண்டும்” என்று இந்து மல்ஹோத்ரா தெரிவித்தார்.

சபரிமலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மதுரை ஆதீனம் வரவேற்பதாக அறிவித்துள்ளது.

எதிர்ப்பு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். “சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon