மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

ஏமாற்றுக்கும் நம்பிக்கைக்கும் இடையேயான யுத்தம்!

ஏமாற்றுக்கும் நம்பிக்கைக்கும் இடையேயான யுத்தம்!

ஆமிர் கான் நடிக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி இணைய ரசிகர்களைத் தனது பக்கம் இழுத்துள்ளது.

முன்னதாக தான் நடித்திருந்த தூம் 3 படத்தை இயக்கியவரான விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவுடன் ஆமிர் கான் மீண்டும் இணைந்துள்ள படம் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். பிரமாண்ட பொருட்செலவில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இதைத் தயாரித்துவருகிறது. இந்தப் படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி 3டி மற்றும் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. இதில் ஆமிர் கானுடன் இணைந்து பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன், கத்ரினா கைஃப், 'தங்கல்' பட புகழ் ஃபாத்திமா சனா சாயிக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று (செப்டம்பர் 27) வெளியாகி இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய வருகையை விவரிப்பதுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லர் சுமார் 3 நிமிடங்களுக்கும் மேலாக ஓடுகிறது.

ஆங்காங்கே பாகுபலியையும் ஃபைரேட் ஆஃப் தி கரீபியன்ஸ் படக் காட்சிகளையும் நினைவுபடுத்துவதாக அமைந்துள்ள இதில் படத்தின் முக்கியக் காதாபாத்திரங்கள் அனைவருமே தோன்றியுள்ளனர்.

தன்னை வீழ்த்த தயார்படுத்தப்பட்டுவரும் ஆமிர் கானுடன் மோத அமிதாப் தயாராகிற காட்சி , இந்த ட்ரெய்லரின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. "நான் ஏமாத்துறதுக்குப் பொறந்தவன்" என ஆமிர் சொல்ல "நான் நம்புறதுக்குப் பொறந்தவன்" என அமிதாப் சொல்லும் வசனம் தற்போது சமூக வலைதளங்களில் தனித்த கவனம் பெற்றுள்ளது.

இந்தப் படம் தீபாவளியையொட்டி அதாவது நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon