மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

ஹிமா தாஸுக்கு கிடைத்த பெருமை!

ஹிமா தாஸுக்கு கிடைத்த பெருமை!

தடகளத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான ஹிமா தாஸ் அசாம் மாநிலத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஆண்டு தோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்/வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா, அர்ஜுனா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 25) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஹிமா தாஸ் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் ஃபின்லாந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்ட ஹிமா தங்கம் வென்று அசத்தியிருந்தார். சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்திவரும் இளம் ஹிமாவை தற்போது அசாம் மாநிலத்தின் தூதுவராக அம்மாநில முதல்வர் சர்பானாந்தா சோனோவால் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை ஹிமா தாஸ் இன்று (செப்டம்பர் 26) காலை சந்தித்துள்ளார். இதுகுறித்து ஹிமா வெளியிட்டுள்ள பதிவில், "சிறுவயது முதல் நான் பார்த்து வளர்ந்த ஒரு சாதனையாளரை இன்று சந்தித்தேன். மறக்கமுடியாத இந்த ஜெர்சியை எனக்கு பரிசளித்ததற்கு மிகவும் நன்றி சார். உங்களிடமிருந்து கிடைத்த ஊக்கமான வார்த்தைகள் என் எதிர்காலத்தை ஊக்கப்படுத்த உதவும்" என்று பதிவிட்டுள்ளார்.

வரவிருக்கும் தெற்காசிய விளையாட்டு தொடர், ஆசிய சாம்பியன்ஷிப், உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் பதக்கம் வெல்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக ஹிமா தாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon