ஆசியக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில் வங்கதேசம் புதிய உத்தியைக் கையாண்டு வெற்றி கண்டுள்ளது.
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி துபாயில் இன்று தொடங்கியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட ஐந்து வீரர்களும் நீக்கப்பட்டு, ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஜ்வேந்திர சஹல் ஆகியோர் மீண்டும் இந்தப் போட்டியில் அணிக்குத் திரும்பினர்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா சேஸிங் செய்ய முடிவு செய்தார். முன்னணி வீரரான தமிம் இக்பால் இல்லாதது அந்த அணிக்கு பெரும் குறையாகவே இருந்துவந்தது. இந்தத் தொடரில் இதுவரை வங்கதேசத்தின் தொடக்க ஜோடி பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தப் போட்டிக்கு முன்பாக வங்கதேச அணியின் கேப்டன் மஸ்ரஃபே மொர்டாசா, தொடக்க வீரர் பணிக்கு இதுவரை பயன்படுத்தப்படாத வீரைக் கொண்டு துவக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார். அதன்படி இன்று லிட்டன் தாஸுடன் மெஹிதி ஹாசன் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டார். இவர் வழக்கமாக இந்த அணியில் 8ஆவது அல்லது 9ஆவது வீரராகக் களமிறக்கப்படுபவர். இதற்கு நினைத்த பலனும் கிடைத்தது.
இருவரும் ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சிறப்பாகச் சமாளித்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய லிட்டன் தாஸ் ஒருநாள் அரங்கில் அவரது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வந்த மெஹிதி 59 பந்துகளைச் சந்தித்து 32 ரன்கள் எடுத்து கேதார் ஜாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த இம்ருல் கயீஸ் 2 ரன்களுக்கும், முஸ்பிகுர் ரகுமான் 5 ரன்களுக்கும், முகமது மிதுன் 2 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்திருந்த வங்கதேசம் தற்போது 139 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் மறுமுனையில் லிட்டன் தாஸ் சிறப்பாக ஆடி ஒருநாள் அரங்கில் அவரது முதல் சதத்தை பதிவு செய்தார்.
சற்றுமுன்வரை வங்கதேச அணி 29 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. லிட்டன் தாஸ் 100 ரன்களுடன் களத்தில் உள்ளார்.