மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

புழல் சிறையில் கேமிராக்கள்!

புழல் சிறையில் கேமிராக்கள்!வெற்றிநடை போடும் தமிழகம்

கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சென்னை புழல் சிறையில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டுள்ளார் ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா.

சென்னை புழல் சிறையில் கைதிகள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருவதை நிரூபிக்கும் வகையில் சில புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, தண்டனைக் கைதிகள் பிரிவில் சோதனை மேற்கொண்டனர் அதிகாரிகள். அப்போது நவீன செல்போன்கள், டிவிகள், ஹோட்டல் உணவுகள், போதைப்பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. இவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதற்குத் துணையாக இருந்த சிறைத் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகமெங்கும் கடலூர், சேலம், பாளையங்கோட்டை, மதுரை சிறைகளில் அதிகாரிகள் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். புழல் சிறையில் இருந்த அதிகாரிகள் சிலர் தமிழகத்தின் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். சென்னை புழல் சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவின் புதிய கண்காணிப்பாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். நேற்று (செப்டம்பர் 27) மீண்டும் தண்டனைக் கைதிகள் பிரிவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நான்கு மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில், சிறை வளாகத்தில் ஒரு பிரியாணி அண்டா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர 29 டிவிகள், 18 கட்டில்கள், 27 எஃப்எம் ரேடியோக்கள், 4 குக்கர்கள், கடப்பாரை, 200 கிலோ பாசுமதி அரிசி, 100 கிலோ பொன்னி அரிசி, 80 கிலோ மைதா மாவு, 60 லிட்டர் சமையல் எண்ணெய், 50 கிலோ பருப்பு வகைகள், சீரகம், கடுகு, ஜாம் பாட்டில், சோம்பு, நூடுல்ஸ், காய்கறிகள் போன்றவற்றைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கட்டில்கள் சிறைத் துறை மருத்துவமனைக்குச் சொந்தமானது என்று தெரிய வந்ததையடுத்து, அவை மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 28) புழல் சிறையில் அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுவதாகக் கைதிகள் சுமார் 800 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆலோசனை நடத்தினார் சிறைத் துறை டிஜிபி அசுதோஷ் சுக்லா. அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, சிறைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் அசுதோஷ் சுக்லா. இதன் முடிவில், சிறையின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார் அசுதோஷ் சுக்லா. பறிமுதல் செய்யப்பட்ட தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுத்துச் செல்லவும் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon